தற்போதைய காலகட்டத்தில் உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். உலக அளவில் தகவல் தொடர்புச் சாதனமாக விளங்கும் வாட்ஸ்அப்பில், சில விதிமீறல் செயல்கள் மிகப்பெரிய குற்றங்களாகக் கருதப்படுகின்றன. இந்தப் பிழைகளைச் செய்யும் பட்சத்தில், உங்களது வாட்ஸ்அப் கணக்கு நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக மெட்டா எச்சரித்துள்ளது. வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படுவதற்கு வழிவகுக்கும் அந்த நான்கு தவறுகள் என்னென்ன என்பது குறித்து இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
மூன்றாம் தரப்பு செயலிகளைப் பயன்படுத்துவது :
மெட்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தாமல், கூடுதல் அம்சங்களுக்காகப் பலரும் ஜிபி வாட்ஸ்அப் (GB WhatsApp) அல்லது யோ வாட்ஸ்அப் (Yo WhatsApp) போன்ற மூன்றாம் தரப்புச் செயலிகளைப் பயன்படுத்துகின்றனர். இத்தகைய செயலிகளைப் பயன்படுத்துவது வாட்ஸ்அப்பின் கொள்கை விதிகளை மீறும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. மேலும், இந்தச் செயலிகள் மூலம் மால்வேர் தாக்குதல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால், இத்தகைய மூன்றாம் தரப்புச் செயலிகளைப் பயன்படுத்தும் நபர்களின் வாட்ஸ்அப் கணக்குகளை மெட்டா நிரந்தரமாக ரத்து செய்ய வாய்ப்புள்ளது.
அதிகப்படியான குறுஞ்செய்திகளை அனுப்புவது :
உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவு செய்யாத எண்களுக்கு அளவுக்கு அதிகமாகக் குறுஞ்செய்தி அனுப்புவது, ஒரே ஃபார்வேர்டு செய்தியைத் தொடர்ச்சியாகப் பரப்புவது, அல்லது சம்மந்தம் இல்லாத நபர்களைத் தொடர்ந்து குழுக்களில் இணைப்பது ஆகிய செயல்கள் உங்களைச் சந்தேக வலைக்குள் கொண்டு வந்துவிடும். இது, வாட்ஸ்அப்பில் உங்களை ‘ஸ்பேம்’ (Spam) என அடையாளம் காட்டும். எனவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பட்சத்தில் உங்களது வாட்ஸ்அப் கணக்கை மெட்டா நிரந்தரமாக நீக்கம் செய்யும் வாய்ப்புள்ளது.
மிரட்டல் மற்றும் தொந்தரவுகள் :
நீங்கள் வாட்ஸ்அப் செயலி மூலம் யாருக்காவது மிரட்டல் விடுக்கும் செய்திகளை அனுப்புவது அல்லது பாலியல் தொல்லை கொடுக்கும் விதமாகச் செயல்படுவது ஆகியவை மிகப்பெரிய குற்றமாகக் கருதப்படும். ஒருவரை இழிவுப்படுத்தும் வகையில் பேசுவது, பிளாக் மெயில் செய்வது, வெறுப்புப் பேச்சுக்களைப் பரப்புவது (Hate Speech) போன்ற செயல்பாடுகள் உங்களது கணக்கை மெட்டா நிரந்தரமாக முடக்கம் செய்வதற்கு வழிவகை செய்யும்.
எச்சரிக்கைகளை மீறி அதே தவறை தொடர்வது :
நீங்கள் வாட்ஸ்அப் விதிகளை மீறிச் செயல்படும்போது, மெட்டா முதலில் உங்களுக்கு ஒருமுறை எச்சரிக்கை விடுக்கும். அந்த எச்சரிக்கைகளையும் மீறி நீங்கள் அதே தவறுகளைத் தொடர்ந்து செய்யும் பட்சத்தில், உங்கள் செயல்பாடு விதிமீறல் என்று உறுதி செய்யப்பட்டு, உங்களது வாட்ஸ்அப் கணக்கு எந்த வித அறிவிப்பும் இன்றி நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளது.
Read More : இரவில் குளித்துவிட்டு தூங்கச் செல்பவரா நீங்கள்..? அப்படினா இந்த செய்தி உங்களுக்குத்தான்..!!



