திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலானோர் இதை ஒரு சாதாரண சுற்றுலா பயணமாக எண்ணிக்கொண்டு செல்லும் போதும், உண்மையான பக்தியுடன் செல்வோர் வாழ்க்கையில் மாற்றத்தை அனுபவித்து வருகின்றனர். ‘திருப்பதி சென்று வந்தால் வாழ்க்கையில் திருப்பம் வரும்’ என்ற பழமொழி வெறும் நம்பிக்கையோ, வரலாற்றுப் பின்னணியற்ற கருத்தோ அல்ல. பலர் அனுபவித்த உண்மைதான் என்று கூறப்படுகிறது.
திருப்பதி என்றாலே, முதலில் நினைவுக்கு வருவது கூட்டம் தான். கடும் வரிசைகள், நீண்ட நேரம் காத்திருக்கும் சவால்கள். இந்த சிரமங்களை உணர்ந்து, சிலர் அந்த பயணத்தைத் தவிர்ப்பதும் உண்டு. ஆனால், ஏழுமலையான் தரிசனத்தின் பின்னால் ஒரு ஆழமான ஆன்மிக உண்மை உள்ளது. இது சாதாரண தெய்வத்தின் தரிசனம் அல்ல; சந்திர சக்தி மிகுந்த, பிரபஞ்ச சக்தி கூடிய ஒரு இடத்தில் நடைபெறும் ஆன்மிக அனுபவம் என்று கூறப்படுகிறது.
திருப்பதி, இந்தியாவில் சந்திரனின் சக்தி அதிகம் பரவி இருக்கும் இடங்களில் முதன்மையானது. சந்திரன் மனநிலையை அமைதிப்படுத்தும் சக்தியை கொண்டிருப்பதால், இங்கு அடையப்படும் நிம்மதி ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் உணரக்கூடியதாக இருக்கும். மேலும், திருமலையில் ஸ்ரீராமானுஜர் பதித்த யந்திர சக்ரங்கள் இந்த இடத்திற்கு ஆழமான சக்தியை தருவதாக கூறப்படுகிறது.
வாஸ்து ரீதியாகவும், திருப்பதி அற்புதமான அமைப்பை பெற்றுள்ளது. வடகிழக்கில் நீர்நிலைகள், தெற்கில் உயரமான மலைகள் என அமைந்திருக்கும் இத்தலம், செல்வம் பெருகும் இடமாகவும், மக்கள் அலைமோதும் திருத்தலமாகவும் விளங்குகிறது. இது மட்டும் அல்லாமல், இங்கே காணப்படும் அருவிகள், மூலிகைகள், தூய்மை வாய்ந்த காற்று ஆகியவை உடலுக்கும், மனதிற்கும் ஆரோக்கியத்தை தருகின்றன.
திருப்பதி மலைக்கு காலில் ஏறி செல்லும் வழக்கம். இது ஒரு வகையான இயற்கை சிகிச்சையாகவும் பார்க்கப்படுகிறது. இதில், நமது உடலில் சக்திச் சக்கரங்கள் இயக்கத்தில் வரும். குறிப்பாக, சந்திர தசை அல்லது புக்தியில் இருப்பவர்கள், மன அழுத்தம், தோல் நோய்கள் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு தரிசனம் செய்யும் போது பரிகார நன்மை பெரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருப்பதி போனால், நீண்ட நேரம் அடைத்து வைப்பார்கள் என்று பலரும் சொல்லுவார்கள். ஐதீகம் சொல்லும்போது, மலை மீது குறைந்தபட்சம் பதினொரு மணி நேரம் இருக்க வேண்டும் என்பதே இதற்கான காரணமாகவும் இருக்கலாம். ஜாதக ரீதியாகப் பார்க்கும்போது, மேஷம் முதல் மீனம் வரையிலான ராசி உடையவர்களுக்கு திருப்பதி பெருமாளின் அருள் மிகுந்ததாக அமைந்துள்ளது. சிம்மம், தனுசு, கும்பம் ஆகியோர் வருடத்தில் ஒரு முறை சென்றால் போதும் என கருதப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையானின் அருளை பெற, தினமும் “ஓம் நமோ வேங்கடேசாய நமஹ” எனும் மந்திரத்தை உச்சரிப்பதும், கீழ்க்கண்ட மங்கள பாடல்களை பக்தியுடன் பாடுவதும், வாழ்க்கையில் சகலவித நன்மைகளை பெற்றுத்தரும் என நம்பப்படுகிறது.
“ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்”
“ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித
வக்ஷஸம் ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே”