மனிதர்களை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்றான புற்றுநோயில், இரைப்பையில் (Stomach) உள்ள செல்களில் வளரக்கூடிய அசாதாரண கட்டியே வயிற்றுப் புற்றுநோய் ஆகும். வயிற்றின் மேல் இடது பக்கத்தில் உள்ள இரைப்பை, நாம் உண்ணும் உணவை ஜீரணிக்கும் முக்கிய உறுப்பு ஆகும்.
இந்த வகை இரைப்பை புற்றுநோய் ஆரம்பக் கட்டத்தில் அறிகுறிகளை வெளிப்படுத்தினாலும், அவை தினசரி சந்திக்கும் சாதாரணப் பிரச்சனைகளைப் போலவே இருப்பதால், பலரும் அவற்றைப் புறக்கணித்துவிடுகிறார்கள். இதனால், புற்றுநோய் பெரும்பாலும் முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுகிறது. தாமதமான சிகிச்சையை தவிர்ப்பதற்காக, அதன் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகளை அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம்.
வயிற்றுப் புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகள் :
வயிற்றுப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் அனுசரிக்கப்படும் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டிய முக்கியமான 7 அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
தொடர்ச்சியான வயிற்று வலி: சமீப நாட்களாக, திடீரெனக் காரணமின்றி வயிற்றில் வலி இருந்தால், அதைச் சாதாரணமாக எண்ணாமல் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
பசியின்மை மற்றும் வீக்கம்: சில நாட்களாகப் பசி எடுக்காமலோ, எப்போதும் வயிறு நிரம்பி இருப்பது போன்ற உணர்வு இருந்தாலோ, அல்லது வயிற்றில் வீக்கம் காணப்பட்டாலோ, புற்றுநோய் கட்டிகள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
காரணமற்ற எடை இழப்பு: எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் உடல் எடை மிக வேகமாக திடீரென்று குறைந்தால், இது புற்றுநோயின் முக்கிய எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.
நெஞ்செரிச்சல்: அஜீரணக் கோளாறு அல்லது நெஞ்செரிச்சல் ஆகியவை சில வாரங்களுக்குத் தொடர்ச்சியாக நீடித்தால், அது வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கக்கூடும்.
மலத்தில் மாற்றங்கள்: மலம் கழிப்பதில் மாற்றம் (அளவு, நிலைத்தன்மை), தொடர்ச்சியான வயிற்று அசௌகரியம் ஆகியவற்றுடன், மலத்தில் இரத்தக்கசிவு காணப்பட்டால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது மிக அவசியம்.
குடலியக்கப் பிரச்சனை: வயிற்றுப் புற்றுநோய் கட்டிகள் குடலியக்கத்தைப் பாதித்து, அடிக்கடி வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கலை ஏற்படுத்தலாம்.
விழுங்குவதில் சிரமம்: புற்றுநோய் உணவுக்குழாய் வரை பரவியிருந்தால், திட அல்லது திரவ உணவுகள் எதை விழுங்கினாலும் சிரமத்தை ஏற்படுத்தும். இது சில சமயம் இருமல் அல்லது மூச்சுத்திணறலை உண்டாக்கலாம்.
இந்த அறிகுறிகளைத் தொடர்ந்து சந்தித்தால், தாமதிக்காமல் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது கடுமையான பின்விளைவுகளைத் தடுக்க உதவும் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Read More : கார்த்திகை பௌர்ணமி கிரிவலம் எப்போது செல்ல வேண்டும்..? தேதி, நேரம், பலன்கள் இதோ..!!



