நம் அன்றாட வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதன் மூலம் ஏற்படும் அச்சுறுத்தல்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சமீப காலங்களில், AI கருவிகளைப் பயன்படுத்தி, ஒருவரின் உண்மைப் புகைப்படங்களை சிதைத்து, ஆபாசமான அல்லது தவறான சித்தரிப்புகளாக மாற்றும் ‘டீப்ஃபேக்’ (Deepfake) தொழில்நுட்பத்தின் அத்துமீறல்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன.
இணையத்தில் எளிதாகக் கிடைக்கும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தனிநபரின் அனுமதியோ அல்லது சம்மதமோ இல்லாமல், குறிப்பாகப் பெண்களின் படங்களைத் தவறாகச் சித்தரித்து வெளியிடும் குற்றச் செயல்கள் பெருகி வருகின்றன. இந்நிலையில், உயரிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான ஐஐடி வளாகத்திலேயே, ஒரு மாணவர் சக மாணவிகளின் புகைப்படங்களை AI மூலம் ஆபாசமாகச் சித்தரித்த சம்பவம், இந்த தொழில்நுட்பத்தின் ஆபத்தான மறுபக்கத்தை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் நயா ராய்ப்பூரில் உள்ள சர்வதேச தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிலாஸ்பூரைச் சேர்ந்த ரஹீம் அத்னன் (20) என்ற பி.டெக் 3ஆம் ஆண்டு மாணவர், தனது வகுப்புத் தோழிகளின் புகைப்படங்களை AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசமாகச் சித்தரித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு ரஹீம் அத்னனுக்கு எதிராக அவரது வகுப்பைச் சேர்ந்த பல மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் உடனடியாக விசாரணையைத் தொடங்கிய கல்லூரி நிர்வாகம், மாணவர் தங்கியிருந்த விடுதி அறையில் சோதனை நடத்தியது. இந்தச் சோதனையில், ரஹீம் பயன்படுத்திய செல்போன், லேப்டாப் மற்றும் பென் டிரைவ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர், அதை ஆய்வு செய்தபோது அதில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் பெரும்பாலான படங்கள், கல்லூரியில் படிக்கும் சக மாணவிகளின் புகைப்படங்களை ஏஐ கருவி மூலம் ஆபாசமாக மாற்றியவை என்பதும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, கல்லூரி நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவர் ரஹீம் அத்னனை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி நிர்வாகம் சார்பில் இந்த வழக்கைக் கையாள 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதுடன், மாணவர் ரஹீம் உடனடியாக கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவரது மின்னணுச் சாதனங்களை ஆய்வு செய்து வரும் போலீசார், சித்தரிக்கப்பட்ட ஆபாசப் படங்களை அவர் வேறு யாரிடமாவது பகிர்ந்தாரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.