திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மில்லத் நகரை சேர்ந்த அப்புன்ராஜ் (26) என்பவருக்கும் அவரது மனைவி ஜீவாவுக்கும், 7 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், ஜீவாவுக்கும் பிரேம்குமார் என்ற இளைஞருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த அப்புன்ராஜ் சில மாதங்களுக்கு முன்பு பிரேம்குமாரை கண்டித்ததால், ஜீவா அவருடனான தொடர்பை துண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பிரேம்குமார், நேற்று முன்தினம் நள்ளிரவில் அப்புன்ராஜ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டின் பின்பக்கச் சுவர் ஏறிக் குதித்து உள்ளே சென்றுள்ளார். அப்போது, “என்னுடனான உறவில் இருந்த உன் மனைவியை பிரித்தது ஏன்?” எனக் கேட்டு அப்புன்ராஜுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரேம்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இந்த கொடூரத் தாக்குதலில் அப்புன்ராஜுக்கு தலை உள்ளிட்ட பல இடங்களில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டு உயிருக்குப் போராடினார். பின்னர், அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதை அறிந்த பிரேம்குமார், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த அப்புன்ராஜை மீட்டு, உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பின்னர், சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி தாலுக்கா காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பிரேம்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.



