அண்மைக்காலமாக, நடிகர் அஜ்மல் அமீருக்கு (Ajmal Ameer) எதிரான பாலியல் பேச்சு சர்ச்சை சமூக ஊடகங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ‘அஞ்சாதே’ திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் நடித்துள்ளார். தற்போது, இவருடையதாக கூறப்படும் ஆடியோ உரையாடல்களும், வீடியோ அழைப்புக் காட்சிகளும் பொது வெளியில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
‘என்டே கேசட்’ (Ente Cassette) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ அழைப்புக் காட்சிகள் மற்றும் தொலைபேசி உரையாடல்கள், நடிகர் அஜ்மல் பாலியல் ரீதியாகப் பேசியதாகக் குற்றம் சாட்டுகின்றன. இந்த உரையாடலில், ஒரு பெண் அஜ்மலிடம் அவருடைய திருமணம் குறித்துக் கேட்க, அவர் அதற்கு “அதையெல்லாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்?” என்று எதிர்வினை ஆற்றுவதுடன், “தங்குவதற்கான இட வசதியை ஏற்படுத்தித் தருகிறேன்” என்றும் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக அஜ்மல் அமீர் இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்தச் சம்பவத்தால், சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக விமர்சனங்கள் பரவி வருகின்றன. இதன் விளைவாக, நடிகர் அஜ்மல் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் கமெண்ட் பகுதியை ஆஃப் செய்து வைத்துள்ளார்.
மறுபுறம், அஜ்மல் அமீருக்கு ஆதரவாகவும் குரல்கள் வலுத்துன. வெளியான வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் உரையாடலின் ஒரு சிறு பகுதி மட்டுமே என்றும், அஜ்மல் அந்தப் பெண்ணைத் தொந்தரவு செய்ததற்கான ஆதாரம் இல்லை என்றும் கூறி வருகின்றனர். இந்த உரையாடல் இரு தரப்பினரின் சம்மதத்துடன் நடந்தது என்றும், வீடியோ அழைப்பின்போது அந்தப் பெண் சிரிப்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், நடிகர் அஜ்மலைக் குறை கூறுவதற்கு முன் உண்மை நிலையை முழுமையாக ஆராய வேண்டும் என்றும், பரஸ்பர நம்பிக்கையுடன் நடந்த ஒரு தனிப்பட்ட உரையாடலை, ஒருவரைக் கேவலப்படுத்தும் நோக்குடன் வெளியிடப்பட்டதுபோல் தெரிகிறது என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த பதிவுகளை வெளியிட்ட ‘என்டே கேசட்’ பக்கத்தை நிர்வகிப்பவர் அப்துல் ஹக்கீம் என்ற நபர்தான் என்றும் தெரிய வந்துள்ளது.
இந்த அப்துல் ஹக்கீம் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் இருப்பதையும் சமூக வலைத்தளங்கள் குறிப்பிட்டுள்ளன. கொச்சியில் உள்ள ஒரு விடுதியில், ஒரு தம்பதியினரைத் தாக்கியதுடன், கேள்வி கேட்ட கணவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மனைவியுடன் செல்ஃபி எடுத்த வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.



