கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் கார் வாடகைக்கு ஓட்டி வந்தவர் அலாவுதீன். இவர், ஓராண்டுக்கும் மேலாக காணாமல் போனதாக அவருடைய மனைவி சுமையா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், அலாவுதீனை எங்கு தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் அலாவுதீனின் தம்பி ஹாரிஸ், ஹக்கீம் என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றதால் கைது செய்யப்பட்டார். “நீ என்னுடைய அண்ணியுடன் தவறான தொடர்பு வைத்திருந்ததால் தான் அலாவுதீன் காணாமல் போனார்” என்று ஹக்கீம் மீது ஹாரிஸ் குற்றம் சாட்டினார். இந்தச் சம்பவம் காவல் நிலையம் வந்தபோது, ஹக்கீம் அளித்த சில தகவல்களின் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
விசாரணையில், அலாவுதீன் திமுகவின் 3-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ரவிக்குமாரின் இரண்டாவது மகன் சரண்குமாரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இந்தக் கள்ளத்தொடர்பு சரண்குமாருக்கு தெரியவந்ததால், மனைவி கோபித்துக்கொண்டு சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சரண்குமார், தன் தந்தை நகர்மன்ற உறுப்பினர் ரவிக்குமார் மற்றும் மற்றுமொரு சகோதரன் துணையுடன் அலாவுதீனை தீர்த்துக்கட்ட முடிவெடுத்தார்.
இதையடுத்து, அலாவுதீனை மூவரும் சேர்ந்து அடித்துக் கொலை செய்தனர். பிறகு, உடலை மாதேஸ்வரன் மலை கோவில் பின்புறம் உள்ள புதர் பகுதிக்கு எடுத்துச் சென்று தீயிட்டு எரித்துள்ளனர். பின்னர், எதுவும் நடக்காதது போல இருந்து வந்த சரண்குமார், கர்நாடகாவில் இருந்து தன் மனைவியை அழைத்து வந்து மீண்டும் வாழ தொடங்கினார்.
இந்த சூழலில் தான், தற்போது காவல்துறையினர் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு வருடமாக காணாமல் போன நபரின் மர்மம், கள்ளத்தொடர்பு காரணமாக நடந்த கொலையில் முடிந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.



