தவெக மாநில மாநாட்டில் பேசிய விஜய் மீண்டும் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.. அப்போது பேசிய அவர் “ தவெக கையில் எடுத்திருப்பது உண்மையான அரசியல்.. உணர்வுப்பூர்வமான அரசியல், நாட்டு மக்களுக்கு நல்லதை செய்யும் அரசியல்.. வாகை சூடும் வரலாறு திரும்புகிறது என்று இந்த மாநாட்டிற்கு பெயர் வைத்துள்ளோம்.. 1967, 1977 ஆகிய ஆண்டுகளில் தமிழக அரசியல் மிகப்பெரிய ஆட்சி அதிகார மாற்றம் நடந்தது போல் 2026ல் அப்படி ஒரு வரலாறு திரும்பப் போகிறது என்பதை உறுதியாக சொல்லும் மாநாடு தான் இந்த மாநாடு..
தவெகவின் முதல் மாநாட்டுக்கு பிறகு நமக்கு எதிராக எத்தனை குரல்கள் வந்தது.. அவற்றை சிறிய சிரிப்புடன் கடந்து வந்துள்ளோம்.. சினிமா என்ற கலை ஆயுதம் வாயிலாக சாதி, மதம் இனம் கடந்து ஒவ்வொரு மனிதனுக்காக ஒலிக்கும் உரிமைக் குரல்.. மாநில உரிமை, சமூக நீதி, பெண்கள் உரிமைக்காக, மதச்சார்பின்மைக்காக ஒலிக்கும் குரல்.. இந்த குரல் ஒருபோதும் ஓயாது..
இவர் எல்லாம் எங்கு கட்சி தொடங்கப் போகிறார்? இவர் எப்படி மாநாட்டை நடத்தப் போகிறார் என்றார்கள்? இப்போது விஜய் ஷூட்டிங்கில் இருந்து நேரடியாக எப்படி ஆட்சியை பிடிக்கப் போகிறார் என்கிறார்கள்? இந்த கூட்டம் வெறும் ஓட்டாக மட்டுமல்ல, வரும் தேர்தலில் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு வைக்கப்போற வேட்டாக, நம்மை கோட்டைக்கு அனுப்பும் ரூட்டாக இருக்கப்போகிறது என்பதை விரைவில் தெரிந்து கொள்வீர்கள்..” என்று தெரிவித்தார்
தொடர்ந்து பேசிய அவர் “ நமது ஒரே கொள்கை எதிரி பாஜக தான்.. ஒரே அரசியல் எதிரி திமுக தான்.. இதில் எந்த மாற்றமும் இல்லை.. இந்த கூட்டணி வைத்துக் கொண்டு ஊரை ஏமாற்றும் கட்சி தவெக இல்லை.. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் நம்முடன் இருக்கிறார்கள்.. தமிழ் உறவுகள் எல்லாருமே விஜய், விஜி, தளபதி விஜய் என சொந்தம் கொண்டாடுகிற இவர்களின் அன்பும் ஆசியும் நம்முடன் இருக்கும் போது, பாசிச பாஜக உடன் கூட்டணி வைக்க, நாம் என்ன உலக மகா ஊழல் கட்சியா என்ன?
நாம் யார் தெரியுமா? இந்தியாவின் மகத்தான மக்கள் சக்தி கொண்ட வெகுஜன மக்கள் படை.. இந்த அடிமை கூட்டணியில் சேர வேண்டிய அவசியம் நமக்கு இல்லை.. மக்களை ஏமாற்றும் கூட்டணியாக நமது கூட்டணி இருக்காது.. நமது கூட்டணியில் வருவோருக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வழங்கப்படும்..
2026 தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கு தான் போட்டி.. ஒன்னு டிவிகே, இன்னொன்னு DMK.. கூட்டணி வைத்து நாம் ஜெயித்துவிடலாம் என நினைப்பெல்லாம் இந்த தேர்தலில் பலிக்காது..” என்று தெரிவித்தார்..