சென்னை கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றும் 35 வயது பெண் காவலர் ஒருவரிடம், இன்ஸ்டாகிராம் மூலம் காதலிப்பதாக கூறிப் பழகி, பணம் மற்றும் நகைகளை அபகரித்த இளைஞரை அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் அந்தப் பெண் காவலர், கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரைப் பிரிந்து, 2 மகள்களுடன் அண்ணா நகர் பகுதியில் தனியாக வசித்து வருகிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அவரது செல்போனுக்குத் தொடர்ந்து ஓர் எண்ணில் இருந்து குறுஞ்செய்திகள் வந்துள்ளன. அந்த எண்ணைத் தொடர்புகொண்டபோது பேசிய இளைஞர், தன்னை தருமபுரியைச் சேர்ந்த வசந்த் (36) என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.
பின்னர், இருவருக்கும் இடையேயான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. “நான் உன்னைக் காதலிக்கிறேன். உன்னைத் திருமணம் செய்துகொண்டு, உன் இரு குழந்தைகளையும் நன்றாகப் பார்த்துக் கொள்வேன்” என்று கூறி வசந்த் அந்தப் பெண் காவலரை நம்ப வைத்துள்ளார். இதன் காரணமாக, இருவரும் நேரில் சந்தித்துப் பழகியதோடு தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.
ஒரு நாள், பெண் காவலரின் வீட்டுக்கு வந்த வசந்த், தான் ஒரு புதிய தொழில் தொடங்க வேண்டி இருப்பதாகவும், அதற்காக நிதி உதவி செய்யுமாறும் கேட்டுள்ளார். காதலில் மயங்கிய பெண் காவலர், வசந்திடம் ரூ. 3 லட்சம் ரொக்கம், 6 பவுன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தின் ஆவணங்கள் ஆகியவற்றைக் கொடுத்துள்ளார்.
அதன் பிறகு, வசந்த் மேலும் ரூ. 3 லட்சம் கேட்டபோது, பெண் காவலர் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வசந்த், பெண் காவலரிடம் ஆபாசமாக பேசி மிரட்டியுள்ளார். “இனி உன்னை வந்து பார்க்க மாட்டேன்” என்று கூறிவிட்டு வசந்த் தொடர்பைத் துண்டித்துள்ளார்.
இதன் மூலம் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் காவலர் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், தர்மபுரியை சேர்ந்த வசந்தைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 2 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிச் சங்கிலிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
திருமண ஆசை காட்டிப் பெண் காவலரிடம் மோசடி செய்த வசந்திடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் சக காவலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



