2024 மக்களவை தேர்தலில் சுமார் ஒரு லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்தார்.. எனினும் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. எனினும் எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகின்றன..
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தை பாஜக தனது தேர்தல் மோசடி இயந்திரமாக மாற்றிவிட்டது என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர் “ தேர்தல் ஆணையத்தை பாஜக தனது தேர்தல் மோசடி இயந்திரமாக மாற்றியுள்ளது. பெங்களூருவின் மகாதேவபுராவில் நடந்தது நிர்வாகக் குறைபாடு அல்ல, மக்களின் தீர்ப்பைத் திருடுவதற்கான திட்டமிட்ட சதி.
ராகுல் காந்தி கொடுத்துள்ள வாக்குத் திருட்டு சான்றுகள் இந்த மோசடியை அம்பலப்படுத்துகின்றன. இன்று நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் ஆணையம் நோக்கி ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணி நடத்துகின்றனர். இந்தப் போராட்டத்தில் திமுக தோளோடு தோள் நிற்கிறது. கணினியால் படித்தறியக் கூடிய வடிவத்தில் அனைத்து மாநிலங்களின் வாக்காளர் பட்டியல் கோப்பும் உடனடியாக அளிக்கப்பட வேண்டும்.
அரசியல் ரீதியாக நீக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். வாக்குத் திருட்டு முறைகேடு குறித்த ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்தியாவின் ஜனநாயகத்தை பட்டப்பகலில் பாஜக கொள்ளையடிப்பதை பார்த்துக்கொண்டு நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம்” என்று பதிவிட்டிருந்தார்..
இந்த நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை முதல்வரின் இந்த விமர்சனத்திற்கு பதிலளித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ ராகுல்காந்தியின் ஆதாரமற்ற பேச்சுக்களுக்கு மயங்குவதற்குப் பதிலாக, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மகாதேவபுரா போன்ற தொகுதிகளில் அவர் கூறுவது போல் வாக்குகளைத் திருடி வயநாடு அல்லது ரேபரேலி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றாரா என்று கேட்க வேண்டும்.
2008 முதல் அவரது கட்சி ஒரு முறை, இரண்டு முறை அல்ல, தொடர்ச்சியாக 4 முறை தோல்வியடைந்துள்ளது. தினமும், பொய்களைச் சொல்லி, பின்னர் ஒவ்வொரு பொய்க்கும் உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டு, சிறிதும் வெட்கமின்றி சுற்றித் திரிவது.. இது ராகுல் காந்தியின் வழக்கம். பொய்களின் அடிப்படையில் அடித்தளம் கட்டப்பட்ட ஒரு கட்சியின் தலைவரான அவரைப் பாதுகாக்க யார் வருகிறார்கள். கொடிய கூட்டணி கட்சிகள்
திருமங்கலம் என்ற இழிவான ஃபார்முலா மூலம் வாக்கு திருட்டு கலையை முழுமையாக்கிய திமுக, தேர்தல் பிரச்சாரம் முழுவதும் வாக்காளர்களை கால்நடைகளைப் போல மேய்த்து, இறுதியில் வெள்ளி கொலுசுகள், ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பானைகள் மற்றும் பிரஷர் குக்கர்களால் விலைக்கு வாங்கிய ஈரோடு கிழக்கு ஃபார்முலா, இப்போது ஜனநாயகம் குறித்த சொற்பொழிவுகளை வழங்கி வருவது ஒரு முரண்பாடாகும்.
இந்த வெற்று நாடகங்களுக்குப் பதிலாக, கர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரி அனுப்பிய நோட்டீஸ்களுக்கு பதிலளிக்குமாறு அவரது சகோதரர் ராகுல் காந்திக்கு அறிவுறுத்துமாறு ஸ்டாலினை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.” என்று பதிவிட்டுள்ளார்..