இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி புதன்கிழமை தொடங்கியது. முன்னதாக லீட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்தநிலையில், பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது போட்டியில் ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் – கேஎல் ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 9 வது ஓவரிலேயே ராகுல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதையடுத்துவந்த கருண் நாயர், 31 ரன்களுடன் நடையை கட்டினார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் சதத்தை முன்னேறிய நிலையில், 87 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதன் பின்னர் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 25 ரன்கள், நிதிஷ்குமார் ரெட்டி ஒரு ரன்னில் நடையை கட்டினர். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய சுப்மன் கில் டெஸ்டில் தனது 7-வது சதத்தை நிறைவு செய்தார். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 85 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 310 ரன்கள் சேர்த்துள்ளது. கேப்டன் சுப்மன் கில் 114 ரன்களுடனும் ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதன்மூலம் விராட் கோலி, சவுரவ் கங்குலி போன்ற புகழ்பெற்ற வீரர்களின் சாதனையை கில் சமன் செய்துள்ளார்.
கில் ஒரு கேப்டனாக தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். வரலாற்றில் 5வது இந்திய கேப்டன் என்ற பெருமையை கில் பெற்றுள்ளார். இதற்கு முன்பு, நான்கு வீரர்கள் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர்.
கில்லைத் தவிர, டெஸ்ட் கேப்டனாக தொடர்ச்சியாக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 50+ ரன்கள் எடுத்த சாதனை கோஹ்லி, கங்குலி, சுனில் கவாஸ்கர் மற்றும் விஜய் ஹசாரே ஆகியோரின் பெயரில் உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் கில் 50 ரன்களுக்கு மேல் கடந்தார். முதல் போட்டியிலேயே அற்புதமான சதம் அடித்து கில் வரலாறு படைத்தார். கேப்டனாக கில் அடித்த முதல் சதம் இதுவாகும். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.