இந்திய கிரிக்கெட் அணி தங்கியுள்ள ஹோட்டலுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான பார்சல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஹோட்டலிலேயே இருக்குமாறு BCCI அறிவுறுத்தியுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்தின் பர்மிங்காமில் தங்கி இருந்த இந்திய அணி வீரர்கள் வழக்கம்போல் ஹோட்டலுக்கு அருகிலுள்ள பிராட் ஸ்ட்ரீட் போன்ற இடங்களை சுற்றிப் பார்க்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சென்டனரி சதுக்கத்தில் சந்தேகத்திற்கிடையான ஒரு பார்சல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு காரணங்களால் அவர்கள் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
இதுகுறித்து போலீசார் X பக்கத்தில் கூறியதாவது, “சந்தேகத்திற்கிடையான பார்சல் குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம். எங்களுக்கு பிற்பகல் 3 மணிக்கு தகவல் கிடைத்தது. முன்னெச்சரிக்கையாக அருகில் உள்ள கட்டிடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. தயவுசெய்து அந்தப் பகுதிக்கு செல்ல வேண்டாம்” என போலீசார் X பக்கத்தில் தெரிவித்தனர்.
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, பார்சலில் சோதனை செய்து பார்த்த போது எதுவும் ஆபத்தான பொருள் இல்லை என உறுதியாகியதையடுத்து நிலைமை இயல்புக்கு திரும்பியது. இந்த சூழ்நிலையில், இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் உட்பட எட்டு வீரர்கள் மட்டுமே எட்ஜ்பாஸ்டனில் பயிற்சியில் ஈடுபட்டதாகவும், மற்ற 10 வீரர்கள் தனிப்பட்ட விடுமுறை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறுகிய நேரத்தில் தீர்க்கப்பட்டது எனினும், சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.