சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 3வது ஒருநாள் போட்டியை காணவரும் ரசிகர்களுக்காக இலவச சிற்றுந்து இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதுவரை இரண்டு ஒரு நாள் போட்டி முடிந்த நிலையில், இந்திய அணி 1 போட்டிலும், ஆஸ்ரேலியா அணி 1 போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது. இந்தநிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியை நேரில் பார்க்கவேண்டும் என ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர். போட்டியை பார்க்க பலரும் வருகை தருவார்கள் என்பதால் இன்று ஒரு நாள் மட்டும் அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானம் வரை இலவசமாக சிற்றுந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த இலவச சிற்றுந்து சேவை இன்றுகாலை 11:00 மணி முதல் கிரிக்கெட் போட்டி முடியும் வரை ரசிகர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தருணத்தில் சென்னை மெட்ரோ ரயில் வாகனநிறுத்தும் இடங்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் சென்னை பெருநகர மக்களும் கிரிக்கெட் ரசிகர்களும் பொதுமக்களும் மெட்ரோ ரயில் நிர்வாகம் செய்துள்ள இந்த வசதிகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.