இந்தியா, தனது பாதுகாப்புத் திறனை பெரிதும் உயர்த்தும் வகையில், பிரான்ஸிலிருந்து 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்கத் தயாராக உள்ளது. இதற்கான முன்மொழிவுக்கு, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (DAC) ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் ரூ. 3.25 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதே கூட்டத்தில், இந்திய கடற்படைக்காக 6 P-8i கண்காணிப்பு விமானங்களை வாங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு, இந்திய விமானப்படையின் (IAF) செயற்பாட்டு மற்றும் போர் திறன்களை கணிசமாக வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் இறுதியில் பிரான்ஸ் அதிபர் எம்யூனுவல் மக்ரோன் இந்தியா வர உள்ள நிலையில், அந்தப் பயணத்தின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.
திட்டத்தின் படி, 18 ரஃபேல் விமானங்கள் முழுமையாக தயாரான நிலையில் இந்தியாவுக்கு வழங்கப்படும். மீதமுள்ள 96 விமானங்கள் இந்தியாவில் ஒன்றிணைத்து தயாரிக்கப்படும். மொத்த விமானங்களில் சுமார் 80 சதவீதம் உற்பத்தி இந்தியாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், உள்ளூர் உற்பத்தி பங்கு 60 சதவீதம் வரை உயரலாம் என்றும் கூறப்படுகிறது.
தற்போதைய ரஃபேல் விமானங்கள்
ரஃபேல் போர் விமானங்களை, பிரான்ஸின் முன்னணி பாதுகாப்பு நிறுவனம் டசால்ட் ஏவியேஷன் (Dassault Aviation) தயாரிக்கிறது. தற்போது இந்திய விமானப்படையில் 36 ரஃபேல் விமானங்கள் சேவையில் உள்ளன. முதல் 5 ரஃபேல் விமானங்கள் 2020 ஜூலை மாதத்தில் அம்பாலா விமானப்படை தளத்திற்கு வந்தடைந்தன. அதன் பின்னர் அவை சேவையில் இணைக்கப்பட்டன.
இந்திய விமானப்படை தற்போது 2 ரஃபேல் விமானங்களை இயக்கி வருகிறது. எண் 17 ‘கோல்டன் ஆரோஸ்’ – ஹரியானா மாநிலம் அம்பாலாவில் இயக்கப்படுகிறது.. எண் 101 ‘ஃபால்கன்ஸ்’ – மேற்கு வங்க மாநிலம் ஹசிமாராவில் இயக்கப்படுகிறது.. 2021 ஜூலை மாதத்தில், ஹசிமாராவில் உள்ள எண் 101 ஸ்குவாட்ரனில் ரஃபேல் விமானங்கள் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டன.
ரஃபேல் போர் விமானத்தின் சிறப்பம்சங்கள்
ரஃபேல் என்பது 4.5 தலைமுறை, இரட்டை இன்ஜின் கொண்ட, பல்துறை திறன் வாய்ந்த போர் விமானம் ஆகும். இது பிரான்ஸின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது. அதன் நவீன தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு பணிகளை ஒரே விமானம் மூலம் செய்யும் திறன் இதன் முக்கிய பலமாகும்.
ரஃபேல் பறக்கும் போது ஒரே முறையில் தரை தாக்குதல், உளவு கண்காணிப்பு, கடற்படை தாக்குதல், அணு தடுப்பு தாக்குதல் போன்ற பல பணிகளை ரஃபேல் மேற்கொள்ள முடியும். பறக்கும் நிலையிலேயே பணியின் தன்மையை மாற்றிக் கொள்ளும் ‘ஒம்னி-ரோல்’ திறன் இதற்கு உள்ளது.
மேலும், கிளாஸ் காக்பிட், ஹெல்மெட்-மவுண்டட் சைட்ஸ், பல்வேறு சென்சார்களில் இருந்து வரும் தகவல்களை ஒருங்கிணைக்கும் மேம்பட்ட அவியோனிக்ஸ் அமைப்பு ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. இதனால், விமானிகளைச் சுற்றியுள்ள சூழலை தெளிவாக புரிந்து கொண்டு, வேகமான மற்றும் துல்லியமான முடிவுகளை எடுக்க முடிகிறது.
இந்த புதிய ஒப்பந்தம், இந்தியாவின் பாதுகாப்புத் துறையை மேலும் வலுப்படுத்துவதுடன், உள்ளூர் உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் பெரிய ஊக்கமாக அமையும் என பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
Read More : ராகுல் காந்தியின் எம்.பி., பதவி ரத்து? தேர்தலில் போட்டியிடவும் தடை? பாஜக உரிமை மீறல் நோட்டீஸ்..!



