பஹல்காம் தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹாஷிம் மூசாவை இந்திய ராணுவ சிறப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்..
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி “மினி சுவிட்சர்லாந்து” என்று அழைக்கப்படும் பஹல்காம் உள்ள மிக முக்கியமான சுற்றுலா தளத்தில் பல பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில், ஒரு நேபாள நாட்டவர் உட்பட 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவர்களுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பல ஆண்டுகளாக நீடித்த சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது உட்பட, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வலுவான இராஜதந்திர நடவடிக்கைகளை எடுத்தது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, மே 7 மற்றும் 8 ஆம் தேதிகளின் இடைப்பட்ட இரவில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத தளங்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையைத் இந்தியா தொடங்கியது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது, சுமார் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்..
இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை அதிகரித்தது. எனினும் 4 நாட்களுக்குப் பிறகு, நிலம், வான் மற்றும் கடல் வழியாக அனைத்து துப்பாக்கிச் சூடு மற்றும் இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த இரு நாடுகளும் ஒரு உடன்பாட்டை எட்டின. இதனால் இரு நாடுகள் இடையேயான பதற்றம் முடிவுக்கு வந்தது..
இந்த நிலையில் பஹல்காம் தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹாஷிம் மூசாவை இந்திய ராணுவ சிறப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. ஸ்ரீநகர் அருகே நடந்த என்கவுண்டரில் பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹாஷிம் மூசா உட்பட 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது.
எல்லை தாண்டிய பயங்கரவாத நெட்வொர்க் உடன் தொடர்புடைய ஒரு முக்கிய செயல்பாட்டாளரான மூசா, பல வாரங்களாக தேடப்பட்டு வந்தார்.. இந்த நிலையில் இந்திய ராணுவனத்தின் சிறப்புப் படையினரின் என்கவுண்டரில் அவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இது பயங்கரவாத எதிர்ப்புப் போரில் ஒரு பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது..
ஜம்மு-காஷ்மீரின் டச்சிகாம் அருகே உள்ள ஹர்வானில் அடர்ந்த காடுகளில் இன்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில் குறைந்தது 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய ராணுவம் இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் “தீவிரமான துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். நடவடிக்கை தொடர்கிறது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு காரணமானவர்களைத் தேடுவதற்கான ஒரு பெரிய பாதுகாப்பு நடவடிக்கையின் மத்தியில் இந்த என்கவுண்ட்டர் நடந்தது. ஸ்ரீநகரின் நகர மையத்திலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள டச்சிகாம் பகுதியை நோக்கி சம்பந்தப்பட்ட சில பயங்கரவாதிகள் நகர்ந்திருக்கலாம் என்பதை கடந்த ஒரு மாதமாக சேகரிக்கப்பட்ட உளவுத்துறை தகவல்கள் தெரிவித்தன.. இதன் அடிப்படையில் இன்று பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்..
Read More : ஆபரேஷன் மகாதேவ்: ஸ்ரீநகரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!