ஈரானில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் இந்திய குடிமக்களுக்கு புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
தற்போது ஈரானில் உள்ள இந்தியக் குடிமக்கள், மாணவர்கள், யாத்ரீகர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வணிக விமானங்கள் உட்படக் கிடைக்கக்கூடிய போக்குவரத்து வழிகள் மூலம் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டின் மாறிவரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
ஈரானில் உள்ள அனைத்து இந்தியக் குடிமக்களும் மற்றும் இந்திய வம்சாவளியினரும் உரிய முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு தூதரகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளதுடன், போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளில் இருந்து விலகி இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. குடிமக்கள் ஈரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறும், எந்தவொரு புதிய நிலவரங்கள் குறித்தும் உள்ளூர் ஊடகச் செய்திகளைக் கண்காணிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்தியக் குடிமக்கள் தங்கள் குடிவரவு ஆவணங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்று தூதரகம் வலியுறுத்தியுள்ளது. மேலும் “ஈரானில் உள்ள அனைத்து இந்தியக் குடிமக்களும் தங்களின் கடவுச்சீட்டுகள் மற்றும் அடையாள அட்டைகள் உட்படப் பயண மற்றும் குடிவரவு ஆவணங்களைத் தங்களுடன் தயாராக வைத்திருக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக எந்தவொரு உதவிக்கும் இந்திய தூதரகத்தைத் தொடர்புகொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,” என்று தெரிவித்துள்ளது.
மேலும் “இந்திய தூதரகத்தின் அவசரத் தொடர்பு உதவி எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: கைபேசி எண்கள்: +989128109115; +989128109109; +989128109102; +989932179359. மின்னஞ்சல்: cons.tehran@mea.gov.in,” என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே , ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தில் இதுவரை பதிவு செய்யாத அனைத்து இந்தியக் குடிமக்களும், இந்த இணைப்பைப் பயன்படுத்திப் பதிவு செய்யுமாறு தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது – https://www.meaers.com/request/home.
“இந்த இணைப்பு தூதரகத்தின் இணையதளத்திலும் கிடைக்கிறது. ஈரானில் இணையதளத் தடங்கல்கள் காரணமாக எந்தவொரு இந்தியக் குடிமகனாலும் பதிவு செய்ய முடியாவிட்டால், இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் அவ்வாறு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,” என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
ஈரானில் கடந்த இரண்டு வாரங்களாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.. ஈரான் அரசு தகவல் தொடர்புத் தடையை விதித்துள்ளதுடன், போராட்டக்காரர்கள் மீதான அதன் ஒடுக்குமுறைக்காக சர்வதேச அழுத்தத்தையும் எதிர்கொண்டுள்ளது. ஈரானில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 2,571 ஆக உள்ளது என்று அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலர்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : திபெத்தை உலுக்கிய நிலநடுக்கம்; 2 நாட்களில் ஏற்படும் 2வது நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்..!



