இங்கிலாந்தில் உள்ள நதியில் விநாயகர் சிலையை இந்தியர்கள் மூழ்கடிக்கும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது. சந்தீப் அந்த்வால் என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த இந்த வீடியோ, சில மணி நேரங்களில் 1.6 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. பாரம்பரிய உடையில் பக்தர்கள் படகில் சென்று, விநாயகர் சிலையை நதியில் மூழ்கடிப்பது காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.
இந்த வைரலான காணொளி பல பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது, அதே நேரத்தில் கலவையான எதிர்வினைகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு பயனர், “சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டவை. அதனால் சுற்றுச்சூழலுக்கு பெரிய பிரச்சனை வராது. காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காது. விநாயகர் பார்த்துக்கொள்வார்” எனக் கூறினார்.
இரண்டாவது பயனர், “இந்தச் சடங்குகளை வீட்டிலேயே மரியாதையாகச் செய்யலாம். நீர் மாசுபாடு ஏற்கனவே அதிகம் உள்ளது. வெளிநாட்டில் ஆறுகளை மாசுபடுத்த வேண்டாம்” என்று கூறினார். மற்றொரு பயனர், ” வெளி நாடுகளிலும் இந்திய கலாச்சாரம் எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதை இது காட்டுகிறது” என பெருமையாக கூறினார். கரைக்கப்பட்ட சில அருகே வெள்ளை வாத்துக்கள் மிதந்து கொண்டிருந்தன. அதை பார்த்த பயனர்கள் வாத்துக்கள் விநாயரை வரவேற்பதாக தெரிவித்தனர்.
கணேஷ் சதுர்த்தியிலிருந்து பத்து நாட்கள் தொடர்ந்து பூஜைகள் நடக்கின்றன. இறுதி நாள் பூஜை அனந்த சதுர்தசி எனப்படுகிறது. அந்த நாளில் விநாயகருக்கு விடை கொடுக்கும் ஒரு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. இதை உத்தரபூஜை என்றும் சொல்கிறார்கள். அந்த பூஜையில், விநாயகர் சிலைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, ஆரத்தி எடுத்து, மலர்களை சமர்ப்பித்து மந்திரம் சொல்லி வழிபடுகிறார்கள்.
தயிர், பொங்கல், தேங்காய், மோதகம் போன்ற உணவுப் பொருட்கள் காணிக்கையாக அளிக்கப்படுகின்றன. இந்த பூஜைக்குப் பிறகு தான் சிலையை ஆற்றில் அல்லது கடலில் மூழ்கடிக்கிறார்கள். இது, “விநாயகர் போய் விடுகிறார், ஆனால் அடுத்த ஆண்டு மறுபடியும் வருவார்” என்ற நம்பிக்கையைச் சொல்லுகிறது.
இங்கிலாந்து நதியில் இந்த சடங்கு நடந்த போது, ஒரு சிறிய பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் சிலையை ஆற்றில் மூழ்கடிக்கத் தயாராக இருந்தார்கள். அப்போது நீல தொப்பி அணிந்த ஒருவர் தவறி வழுக்கி நீரில் விழுந்தார். மற்றவர்கள் சடங்கில் கவனம் செலுத்தியதால் உடனே யாரும் கவனிக்கவில்லை. பின்னாள் இருந்த சிலர் அவரைக் காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.