புது டெல்லியிலிருந்து இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்குப் புறப்பட்ட இண்டிகோ (IndiGo) விமானம் ஒன்று, சுமார் ஏழு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு நடுவானில் திடீரென யூ-டர்ன் போட்டு, மீண்டும் இந்தியத் தலைநகருக்கே திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது. மேற்கு ஆசியாவில் (மத்திய கிழக்கு நாடுகள்) நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, கடைசி நேரத்தில் விதிக்கப்பட்ட வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாடுகளே இதற்குக் காரணமாகும்.
நடந்தது என்ன?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கி இன்றுடன் (திங்கள்கிழமை) 10 நாட்கள் ஆகின்றன. இந்த நிலையில், நார்வேஜியன் நிறுவனமான ‘நார்ஸ்’ (Norse) உடன் இணைந்து இண்டிகோ இயக்கிய இந்த விமானம், எத்தியோப்பியா மற்றும் எரித்திரியா எல்லைக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது திடீரெனத் திருப்பப்பட்டது. இதனை ‘பிளைட் ரேடார் 24’ தளம் உறுதிப்படுத்தியுள்ளது.
இண்டிகோ நிறுவனத்தின் விளக்கம்
இதுகுறித்து இண்டிகோ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் பேசிய போது “ மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக, எங்களது சில விமானங்கள் நீண்ட தூரச் சுழற்சி பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது அல்லது திசைதிருப்பப்படுகிறது. டெல்லியிலிருந்து மான்செஸ்டர் சென்ற 6E 033 விமானம், மேற்கு ஆசியப் பகுதியில் கடைசி நேரத்தில் விதிக்கப்பட்ட வான்வெளித் தடையால் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியுள்ளது. பயணத்தைத் தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம். எங்களைப் பொறுத்தவரை பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பே முதன்மையானது.” என்று தெரிவித்தார்..
விரிவடையும் போர் சூழல்
பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்த மோதல், ஈரான் மற்றும் இஸ்ரேல் எல்லைகளைத் தாண்டி தற்போது விரிவடையத் தொடங்கியுள்ளது. ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), கத்தார் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
தூண்டுதல் ஏதுமின்றி அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே அந்தத் தளங்களைத் தாக்குவதாக ஈரான் கூறுகிறது. எனினும் ஈரான் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சவுதி அரேபியா குற்றம் சாட்டியுள்ளது.
வான்வழிப் பாதிப்புகள்
மேற்கு ஆசியப் பிராந்தியத்தின் வான்வழிப் பாதைகள் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரமாகப் பல விமானங்கள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தி வருகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்திற்கான சில விமான சேவைகள் மட்டும் குறிப்பிட்ட மாற்றுப் பாதைகள் வழியாக இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள திடீர் கட்டுப்பாடுகள் சர்வதேச விமானப் போக்குவரத்தைப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளன.
Read More : PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு புதிய அப்டேட்.. EPFO முக்கிய அறிவிப்பு.. ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும்..



