மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் நோக்கி 166 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற இண்டிகோ விமானத்தில் (விமான எண்: 6E 6961) நடுவானில் திடீரென எரிபொருள் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக பெரும் அசம்பாவிதத்தைத் தவிர்க்கும் வகையில், விமானம் அவசரமாக வாரணாசி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
கொல்கத்தாவில் இருந்து ஸ்ரீநகருக்குச் சென்று கொண்டிருந்த இந்த விமானத்தில் எரிபொருள் கசிவு ஏற்பட்டதை விமானி உடனடியாக கவனித்தார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த விமானி, துரிதமாகச் செயல்பட்டு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அலுவலரைத் தொடர்புகொண்டு விமானத்தை அவசரமாகத் தரையிறக்க அனுமதி கோரினார்.
அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, வாரணாசி அருகே சென்று கொண்டிருந்த அந்த விமானம், அங்குள்ள லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு விமான நிலையத்தில் நேற்று மாலை 4.10 மணியளவில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் உரிய நேரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால், அதில் பயணித்த 166 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதனால் ஒரு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
திடீரென ஏற்பட்ட இந்த எரிபொருள் கசிவு சம்பவம், விமானப் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து வாரணாசி விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், “கொல்கத்தாவில் இருந்து ஸ்ரீநகருக்குச் சென்ற இண்டிகோ விமானத்தின் எரிபொருள் டேங்கில் ஏற்பட்ட கசிவு குறித்து விமானி தகவல் தெரிவித்தார். உரிய ஒப்புதலுக்குப் பிறகு விமானம் வாரணாசியில் தரையிறக்கப்பட்டது” என்று தெரிவித்தனர்.
Read More : “அம்மா.. திரும்ப திரும்ப அப்படி சொல்லாத”..!! பெற்ற தாயை கத்தியால் குத்திய 14 வயது மகன்..!! கதிகலங்கிய கடலூர்



