பணியாளர்கள் பிரச்சனை, செயல்பாட்டு தடங்கள் உள்ளிட்ட காரணங்களால் கடந்த 5 நாட்களில் 1000-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.. இதையடுத்து பல விமான நிறுவனங்கள் விமான டிக்கெட் விலையை பன்மடங்கு உயர்த்தின.. இதையடுத்து நியாயமான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று மத்திய அரசு அனைத்து விமான நிறுவனங்களையும் அறிவுறுத்தியது..
இந்த நிலையில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை (MoCA) இன்று உள்நாட்டு எகானமி வகுப்பு விமானங்களுக்கான அதிகபட்ச கட்டண வரம்புகளை (fare ceilings) கட்டாயமாக அமல்படுத்தியுள்ளது. புதிய கட்டண வரம்புகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. இவை ஒவ்வொரு பயண தூரத்துக்கான பிரிவுகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
| பயண தூரம் (Stage Length) | அதிகபட்ச கட்டணம் (₹) |
|---|---|
| 500 கி.மீ வரை | ₹7,500 |
| 500 – 1000 கி.மீ | ₹12,000 |
| 1000 – 1500 கி.மீ | ₹15,000 |
| 1500 கி.மீக்கு மேலாக | ₹18,000 |
மேலும், நிலைமை முழுவதும் சீராகும் வரை இந்த கட்டண வரம்புகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு டிசம்பர் 7க்குள் பணத்தைத் திருப்பி வழங்க வேண்டும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் இண்டிகோவுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.. இதுகுறித்து விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் “ அதிகளவில் ரத்தான மற்றும் தாமதமான விமானங்களால் பல பயணிகள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். பயணிகள் எந்த நிதிச் சுமையையும் சந்திக்கக்கூடாது என்பதற்காக, உடனடி பணத்தீர்ப்பு வழங்குவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமை சீராகும் வரை, விமான நிறுவனத்தின் நடவடிக்கைகள் அமைச்சகத்தால் நெருக்கமாக கண்காணிக்கப்படும். பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் “ரத்து செய்யப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட அனைத்து விமானங்களுக்கான பணத் திருப்பிச் செலுத்தல் (ரிபண்ட்) செயல்முறை 2025 டிசம்பர் 7, ஞாயிறு, இரவு 8:00 மணிக்குள் முழுமையாக முடிக்கப்பட வேண்டும்.. ரத்தான விமானங்களால் பயணத் திட்டங்கள் பாதிக்கப்பட்ட பயணிகளிடம் மீண்டும் அட்டவணை மாற்றம் (rescheduling) செய்ய எந்தக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது.. ரிபண்ட் செயல்முறையில் தாமதம் அல்லது விதிகளை பின்பற்றாத நிலை ஏற்பட்டால், உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது..
Read More : Flash : கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு 3-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்.. தீவிர விசாரணை..!



