வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ஹைதராபாத் செல்லும் இண்டிகோ விமானம் திருப்பி விடப்பட்டது.
பெருமளவு விமான ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட குழப்பம் தொடரும் நிலையில், இண்டிகோ நிறுவனத்திற்கு மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டுள்ளது.. ஹைதராபாத் செல்லும் ஒரு இண்டிகோ விமானத்தில் குண்டு இருப்பதாக வந்த மிரட்டல் காரணமாக, அந்த விமானம் அவசரமாக வேறு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
அதிகாரிகள் பயணிகளின் பாதுகாப்பிற்காக உடனடி நடவடிக்கை எடுத்தனர். விமானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, விமானம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது.
சவுதி அரேபியாவின் மதீனாவில் இருந்து தெலங்கானாவின் ஹைதராபாத் நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானம் 6E 058, குண்டு மிரட்டல் வந்ததையடுத்து அவசர தரையிறக்கம் (Emergency Landing) செய்யப்பட்டது. இந்த விமானத்தில் 180 பயணிகள் மற்றும் 6 குழு உறுப்பினர்கள் இருந்ததாக ANI, விமான நிலைய வட்டாரங்களை மேற்கோளிட்டு தெரிவித்தது.
துணை காவல் ஆணையர் (DCP) அதுல் பன்சல் இதுகுறித்து பேசிய போது “ விமானம் மதியம் 12:30 மணியளவில் அஹமதாபாத் சர்தார் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. பயணிகள் மற்றும் குழுவினர் அனைவரும் உடனடியாக விமானத்திலிருந்து இறக்கப்பட்டனர். விமானத்திற்குள் முழுமையான சோதனை நடத்தப்பட்டது.
மதீனாவில் இருந்து ஹைதராபாத் செல்லும் விமானம் வழியில் இருக்கும் போது, இண்டிகோ விமானத்திற்கு ஒருவர் மின்னஞ்சல் அனுப்பி, விமானத்தில் குண்டு வைத்துள்ளோம் என்று மிரட்டினார். அப்போது அருகிலிருந்த விமான நிலையம் அஹமதாபாத் என்பதால், முன்னெச்சரிக்கையாக விமானத்தை அங்கே தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. எல்லா பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர்.” என்று தெரிவித்தார்..
அதிகாரி ஒருவர் பேசிய போது “ வெடி குண்டு மிரட்டல் குறித்து தகவல் கிடைத்த உடனே, உள்ளூர் காவல்துறை சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF) அதிகாரிகளுடன் சேர்ந்துப் பணியில் ஈடுபட்டது. ஆரம்ப சோதனையில் எந்த சந்தேகத்திற்குரிய பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை..” என்று தெரிவித்தார்.
இண்டிகோ நிறுவனத்தில் தொடரும் குழப்பம்
இண்டிகோ ஏர்லைன்ஸ் தற்போது கடுமையான செயல்பாட்டு சிக்கல்களை சந்தித்து வருகிறது. வியாழக்கிழமை மட்டும் 250-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கடுமையான புதிய குழு பணிநேர விதிகள் (Crew Rostering Rules) காரணமாக விமான அட்டவணைகள் தாறுமாறாக மாறி, இந்தியாவின் பல முக்கிய விமான நிலையங்களில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. நேற்றும் குறைந்தது 150 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அடுத்த 48 மணி நேரத்த்திற்கு கட்டுப்பாடான அட்டவணை மாற்றங்கள் செய்யப்படும் என இண்டிகோ அறிவித்துள்ளது. இந்த தொடர்ச்சியான ரத்துக்களால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்..



