இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் முதல் 3 ஆட்டங்கள் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது. இதனை தொடர்ந்து 16-ந் தேதி ஒருநாள் தொடர் தொடங்குகிறது.
எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகினர். 20 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்தது. 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா(32)-ஷபாலி வர்மா(31) ஆகியோர் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதையடுத்து ஜெமீமா 24 ரன்களிலும், கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து, 4 விக்கெட்டுகளை இழந்து 17வது ஓவரிலேயே 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இதன் மூலம் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா தனது பெயரை வரலாற்று புத்தகங்களில் பொறித்துள்ளார். மூன்றாவது டி20 போட்டியில் 300 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய தீப்தி, இப்போது அனைத்து கால டி20 சாதனையையும் முறியடித்துள்ளார். அதாவது, நேற்றைய போட்டியில் இங்கிலாந்து தொடக்க வீராங்கனை சோபியா டன்க்லியை வீழ்த்தியதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டினார்.
WT20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர்கள்:
1 – தீப்தி சர்மா: 128 போட்டிகளில் 145 விக்கெட்டுகள்
2 – நிடா டார்: 160 போட்டிகளில் 144 விக்கெட்டுகள்
3 – சோஃபி எக்லெஸ்டோன்: 100 போட்டிகளில் 139 விக்கெட்டுகள்.
4 – நாட்டயா பூச்சத்தம்: 102 போட்டிகளில் 126 விக்கெட்டுகள்
5 – அனிசா முகமது: 117 போட்டிகளில் 125 விக்கெட்டுகள்
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது, தீப்தி 300 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய ஆறாவது வீராங்கனையாகவும், ஜூலன் கோஸ்வாமிக்குப் பிறகு இரண்டாவது இந்திய வீராங்கனையாகவும் ஆனார்.
மகளிர் கிரிக்கெட்டில் 300க்கும் மேற்பட்ட சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள்:
355 – ஜூலன் கோஸ்வாமி
335 – கேத்தரின் ஸ்கைவர்-பிரண்ட்
331 – எலிஸ் பெல்லி
317 – ஷப்னிம் இஸ்மாயில்
305 – அனிசா முகமது
301 – தீப்தி சர்மா.
Readmore: எலோன் மஸ்க்குக்கு பெரும் பின்னடைவு!. X தளத்தின் CEO லிண்டா திடீர் ராஜினாமா!. என்ன காரணம்?