ICC மகளிர் உலகக் கோப்பை 2025 போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியாவை 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில், இந்தூரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து , களமிறங்கிய இங்கிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணியில் அதிகப்பட்சமாக ஹீதர் நைட் 109 குவித்தார். மேலும் மற்றொரு ஆட்டக்காரரான எமி ஜோன்ஸ் 56 ரன்கள் விளாசினார். இந்திய அணியில் தீப்தி சர்மா 10 ஓவரில் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்தியா களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல் 6 ரன்களிலும், ஹர்லின் தியோல் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். எனினும் ஸ்மிருதி மந்தானா மற்றும் ஹர்மன் பிரித் கவுர் ஆகியோர் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி இந்தியாவை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றது. ஸ்மிருதி மந்தானா 88 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் இழக்க, அப்போது அணி 234 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது.
ஒரு கட்டத்தில் 30 பந்துக்கு 36 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. கைவசம் ஆறு விக்கெட்டுகள் இருந்தன. இதனால் இந்தியாவின் வெற்றி உறுதி என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் யாருமே நினைக்காத ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. இந்திய வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். கேப்டன் ஹர்மன்பிரித் 70 ரன்களிலும் தீப்தி சர்மா 50 ரன்களிலும், ரிச்சா கவுஸ் 8 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.
அம்ஜோத் கவுர் 18 ரன்களும், ஸ்னே ரனா 10 ரன்கள் எடுக்க இந்திய மகளிர் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அதிர்ச்சி தோல்வியை தழுவியது. உலகக் கோப்பையில் இந்தியா தொடர்ச்சியாக சந்திக்கும் மூன்றாவது தோல்வி இதுவாகும். இந்தியாவுக்கு இப்போது நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு எதிராக இரண்டு போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன. அரையிறுதிக்கு வர அவர்கள் இரண்டிலும் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர்.
Readmore: குட் நியூஸ்…! தமிழகத்தில் புதிதாக 26 இடங்களில் மகளிருக்கான ‘தோழி’ தங்கும் விடுதிகள்…!



