உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்த தீபக் என்ற ராணுவ வீரர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவருடன் பல மாதங்களாக இன்ஸ்டாகிராம் வழியாக பழகி வந்தார். இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியதுடன், இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். காலப்போக்கில், மாணவி தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி தீபக்கிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளார்.
ஆனால், மாணவியைத் திருமணம் செய்யவோ, தனது பெற்றோரிடம் அறிமுகப்படுத்தவோ அல்லது மாணவியின் பெற்றோரிடம் பேசவோ ராணுவ வீரர் தீபக் தொடர்ந்து மறுத்து வந்துள்ளார். இதனால், மாணவிக்கு தீபக் மீது கோபம் அதிகரித்து, திருமணத்திற்கான வற்புறுத்தலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கடந்த நவம்பர் 10-ஆம் தேதி இருவரும் சந்திரசேகர் பூங்காவிற்கு சென்றுள்ளனர். அங்கு சுமார் 7 மணி நேரம் இருவரும் பேசியுள்ளனர். அதன் பின்னரும், மாணவி தன்னைத் திருமணம் செய்யும்படி வலியுறுத்தியதால், ஆத்திரமடைந்த தீபக், மாணவியைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
கொலையை அரங்கேற்றுவதற்காக, மாணவியை தனியாக ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்ற தீபக், அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். பின்னர், அதே பகுதியில் இருந்த ஒரு மரத்தின் கீழ் குழி தோண்டி, மாணவியின் உடலை புதைத்துள்ளார். சில நாட்களுக்குப் பிறகு உள்ளூர் மக்கள் அந்த இடத்தை நோட்டமிட்டபோது, புதைக்கப்பட்ட நிலையில் மாணவியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
முன்னதாக, மகளை காணவில்லை என்று மாணவியின் தாய் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸார், ராணுவ வீரர் தீபக்கிடம் விசாரணை நடத்தியபோது, அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். காவல்துறையினர், இந்தக் கொடூர சம்பவத்தை தீவிர குற்றமாக எடுத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்



