இன்றைய இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக மட்டுமே இருக்காமல், வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தமிழக அரசு படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை (UYEGP) வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள இளைஞர்கள் தங்கள் தொழில் கனவை நனவாக்கப் பெரும் நிதியுதவியையும், அரசு மானியத்தையும் பெற முடியும்.
UYEGP திட்டத்தின் கீழ், ஒருவர் தனது புதிய தொழிலை தொடங்க அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை வங்கி மூலம் கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் என்னவென்றால், நீங்கள் பெறும் கடன் தொகையில் 25 சதவீதம் (அதிகபட்சம் ரூ. 3.75 லட்சம்) தமிழக அரசால் மானியமாக வழங்கப்படுகிறது. இந்த மானியத் தொகையை நீங்கள் அரசுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் :
இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 18 முதல் 45 வயது வரையிலும், சிறப்புப் பிரிவினர் (பெண்கள், SC/ST, BC/MBC, சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்) 55 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். தமிழகத்தில் குறைந்தது 3 ஆண்டுகள் வசித்ததற்கான சான்று அவசியம்.
எந்தெந்த தொழில்களுக்குக் கடன் கிடைக்கும்?
உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் என மூன்று முக்கியப் பிரிவுகளில் இத்திட்டம் கடனுதவி வழங்குகிறது.
உற்பத்தி: பேக்கரி, தையல் கூடம், உணவுப் பதப்படுத்துதல்.
சேவை: செல்போன் பழுதுபார்த்தல், வாகனப் பணிமனை (Workshop), அழகு நிலையம் (Beauty Parlor).
வியாபாரம்: மளிகைக் கடை, ஜவுளி மற்றும் எலக்ட்ரானிக் விற்பனை நிலையங்கள். குறிப்பு: நேரடி விவசாயம் மற்றும் ஆடு, மாடு வளர்ப்பு போன்ற கால்நடைத் தொழில்களுக்கு இத்திட்டத்தில் கடனுதவி வழங்கப்படாது.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆர்வமுள்ள இளைஞர்கள் msmeonline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆதார் அட்டை, கல்விச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் நீங்கள் தொடங்கப்போகும் தொழிலுக்கான இயந்திரங்களின் விலைப்பட்டியல் (Quotation) ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு, மாவட்டத் தொழில் மையத்தில் (DIC) நடைபெறும் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். அங்கு உங்கள் தொழில் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு, பின் வங்கிக்குக் கடன் பரிந்துரை செய்யப்படும். முறையான திட்டமிடலும், தொழில் ஆர்வமும் கொண்ட இளைஞர்களுக்குத் தமிழக அரசின் இந்தத் திட்டம் ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
Read More : சொந்த மாவட்டத்தில் மாஸ் காட்டிய எடப்பாடி பழனிசாமி..!! செம குஷியில் அதிமுக..!! அதிர்ச்சியில் திமுக, தவெக..!!



