மனித வாழ்வில் ஒரு பாதுகாப்பான பொருளாதாரம் மிக முக்கியமான அம்சமாக உள்ளது. எதிர்பாராத பொருளாதார நெருக்கடிகளை சமாளிப்பதற்கும், எதிர்காலத்தை வலிமையாக கட்டமைப்பதற்கும் சேமிப்பும் முதலீடும் அத்தியாவசியமாகின்றன. இந்த வரிசையில், தற்போது சிறந்த பலன்களை வழங்கக்கூடிய முதலீட்டு திட்டமாக முறையான முதலீட்டு திட்டம் (SIP – Systematic Investment Plan) விளங்கி வருகிறது.
பெரும்பாலான மக்கள் எஸ்.ஐ.பி.யில் அதிகப் பணம் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், மாதம் ரூ.5,000 என்ற குறைந்த முதலீட்டில் கூட தொடங்கி, அதன் மூலம் ஒரு கோடி ரூபாய் என்ற நிதி இலக்கை அடைவது சாத்தியமே என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
எஸ்.ஐ.பி.யின் அசுர வளர்ச்சி :
கடந்த சில ஆண்டுகளாக, எஸ்.ஐ.பி.யில் முதலீடு செய்ய இந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 2022ஆம் நிதியாண்டில் இந்தியா மொத்தம் 5.2 கோடி எஸ்.ஐ.பி. கணக்குகளை கொண்டிருந்தது. 2023ஆம் நிதியாண்டில் இது 6.3 கோடியாக உயர்ந்தது. 2024ஆம் நிதியாண்டில் மொத்த எஸ்.ஐ.பி. கணக்குகளின் எண்ணிக்கை 8.4 கோடியாக பல மடங்கு அதிகரித்துள்ளது.
குறிப்பாக, 2025 மார்ச் மாதத்தில் 8.11 கோடியாக இருந்த எஸ்.ஐ.பி. கணக்குகள், அக்டோபர் மாதத்தில் 9.45 கோடியாக உயர்ந்து, இந்தியாவில் இந்த புரட்சிகரமான முதலீட்டு முறைக்கு உள்ள வரவேற்பை காட்டுகிறது.
ரூ.5,000 முதலீட்டில் ரூ.1 கோடி இலக்கு :
மாதம் ரூ.5,000 முதலீட்டில் ரூ.1 கோடி இலக்கை அடைவது எப்படி என்பதற்கு நிதி வல்லுநர்கள் ஒரு எளிய உத்தியை பரிந்துரைக்கின்றனர். இதற்குக் கூட்டு வட்டியின் (Compounding) சக்தியை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
ஒரு முதலீட்டாளர், ரூ.5,000 தொகையுடன் தொடங்கி, சுமார் 20 ஆண்டுகளில் ரூ.1 கோடி என்ற இலக்கை அடைய விரும்பினால், அவர் பின்பற்ற வேண்டிய முக்கியமான விதி ‘ஸ்டெப்-அப் எஸ்.ஐ.பி.’ (Step-Up SIP) ஆகும். அதாவது, அந்த முதலீட்டாளர் தனது மாதாந்திர எஸ்.ஐ.பி. தவணையை ஆண்டுக்கு 10% அதிகரிக்க வேண்டும். உதாரணமாக, முதல் ஆண்டு ரூ.5,000 முதலீடு செய்தால், அடுத்த ஆண்டு அதை ரூ.5,500 ஆக உயர்த்த வேண்டும். இந்த முறையைப் பின்பற்றி, முதலீடு ஆண்டுக்கு சராசரியாக 12% லாபம் பெறும் பட்சத்தில், ரூ.1 கோடி என்ற இலக்கை மிக எளிதாக அடைந்துவிட முடியும்.
நிபுணர்கள் ஆலோசனை :
எஸ்.ஐ.பி.யில் புதிதாக முதலீடு செய்யத் தொடங்கும் நபர்களுக்கு, நிபுணர்கள் முதலீட்டை பிரித்துச் செய்யும் (Diversification) முறையை பரிந்துரைக்கின்றனர். ஒருவர் மாதம் ரூ.5,000 முதலீடு செய்ய திட்டமிட்டால், அந்தத் தொகையை இண்டக்ஸ் ஃபண்ட் (Index Fund) மற்றும் ப்ளெக்ஸி கேப் ஃபண்ட் (Flexi Cap Fund) போன்ற பாதுகாப்பான மற்றும் அதே நேரத்தில் வளர்ச்சி சாத்தியமுள்ள ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்வது பாதுகாப்பையும் நல்ல வருமானத்தையும் தரும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.



