கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான லாரி ஓட்டுநர் செல்வராஜ், குடும்பத்தை விட்டு தனியாக ஒசூரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தார். அப்போது, தருமபுரியைச் சேர்ந்த மேஸ்திரி குணசேகர் என்பவருடன் 5 வருடங்களுக்கு முன்பு அவருக்கு நட்பு ஏற்பட்டது.
இதற்கிடையே, 3 ஆண்டுகளுக்கு முன்பு குணசேகருக்குத் திருமணம் நடந்த நிலையில், அவரது மனைவி காயத்ரிக்கும், செல்வராஜுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. குணசேகர் வேலைக்குச் சென்ற நேரங்களில், செல்வராஜ் தனது வீட்டிற்கு காயத்ரியை வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார்.
செப்டம்பர் 1-ஆம் தேதி, குணசேகர் வேலைக்குச் சென்ற நேரத்தில், காயத்ரி தனது ஒன்றரை வயது குழந்தையுடன், “கிருஷ்ணகிரிக்கு துணி வாங்கச் செல்கிறேன்” என்று கூறிவிட்டு, செல்வராஜின் வீட்டிற்கு வந்துள்ளார். இருவரும் உல்லாசமாக இருந்தபோது, காயத்ரியின் செல்போனைப் பார்த்த செல்வராஜ், அவர் மேலும் சில ஆண்களுடன் தொடர்பில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர், காயத்ரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற செல்வராஜ், காயத்ரியை சுவரில் மோதியும், தலையணையால் முகத்தை அழுத்தியும் கொலை செய்துள்ளார். சம்பவத்தின்போது, குழந்தை அழுதுகொண்டிருந்த நிலையில், செல்வராஜ் அதை அருகில் இருந்த ஒரு பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டிற்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு வந்த ஒசூர் காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, காயத்ரி கொலை செய்யப்பட்ட நிலையிலும், செல்வராஜ் தூக்கில் தொங்கிய நிலையிலும் இருந்தார். இதனைத் தொடர்ந்து, இருவரின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.



