இந்தியா மற்றும் இலங்கையில் 2026-ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கிரிக்கெட் ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பு ஐபிஎல் திருவிழாவை நோக்கி திரும்பியுள்ளது. மார்ச் மாதம் பிறந்தாலே ஐபிஎல் ஜுரம் தொற்றிக்கொள்ளும் சூழலில், இந்த ஆண்டுக்கான போட்டி அட்டவணை எப்போது வெளியாகும் என்ற ஆவல் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்களே, இந்த அட்டவணை தாமதத்திற்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.
ஈஎஸ்பிஎன் கிரிக்இன்போ (ESPNcricinfo) வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்களின்படி, ஐபிஎல் 2026 சீசன் முன்னதாக மார்ச் 28-ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சட்டமன்ற தேர்தல்களை கருத்தில் கொண்டு, வீரர்களின் பாதுகாப்பு மற்றும் மைதான வசதிகளை உறுதி செய்ய, 2 நாட்களுக்கு முன்னதாகவே அதாவது மார்ச் 26-ஆம் தேதியே போட்டிகளை தொடங்க பிசிசிஐ (BCCI) ஆலோசித்து வருவதாக தெரிகிறது. இது குறித்து இறுதி முடிவெடுக்க ஐபிஎல் நிர்வாக குழு மார்ச் முதல் வாரத்தில் கூடி ஆலோசிக்கவுள்ளது.
கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய நகரங்கள் முறையே கேகேஆர் (KKR) மற்றும் சிஎஸ்கே (CSK) அணிகளின் கோட்டைகளாக விளங்குகின்றன. அதேபோல், அசாம் மாநிலத்தின் குவஹாத்தி மைதானம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இரண்டாவது ஹோம் கிரவுண்டாக உள்ளது. இந்த 3 மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதால், போட்டிகளை நடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால், 2008-ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைப்படி, இந்த முறையும் ஐபிஎல் அட்டவணை இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட வாய்ப்புள்ளது.
பிசிசிஐ தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் ஏதும் வராதது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், மார்ச் 26-ல் தொடங்கி மே 31-ஆம் தேதி இறுதிப்போட்டியுடன் தொடரை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரே, எந்தெந்த போட்டிகள் எந்த ஊரில் நடைபெறும் என்ற முழுமையான வரைபடம் வெளியாகும். உலகக்கோப்பை உற்சாகம் முடிவதற்குள்ளேயே ஐபிஎல் அதிரடி தொடங்கவுள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
Read More : Breaking : 2 முறை உயர்வு.. ஒரே நாளில் ரூ.5,200 உயர்ந்த தங்கம் விலை.. வெள்ளி விலை ரூ.20,000 அதிகரிப்பு..



