மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல ஆண்டுகளாக நெருப்பாக இருந்த பதற்றம், தற்போது உலகையே உலுக்கும் மகா யுத்தமாக வெடித்துள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட முயன்ற அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள், பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்ற நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிரடி தாக்குதலை தொடங்கின. ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த கூட்டு தாக்குதலில் ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் நிலைகுலைந்துள்ளன.
இந்த தாக்குதலின் மிக முக்கியமான மற்றும் அதிர்ச்சியூட்டும் திருப்புமுனையாக, ஈரானின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட ஆன்மீக தலைவர் அயதுல்லா அலி காமேனி (86) கொல்லப்பட்டார். போர் தொடங்கிய முதல் நாளிலேயே அவர் இலக்கு வைக்கப்பட்டுக் கொல்லப்பட்டது உலக நாடுகளை பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி, ஈரானின் ராணுவ மந்திரி அசிஸ் நாசிர்சாடே, ராணுவத் தளபதி அப்துல் ரகிம் மவுசவி உள்ளிட்ட உயர்மட்ட ராணுவக் குழுவினர் ஆலோசனையில் இருந்தபோது நடத்தப்பட்ட துல்லியமான ஏவுகணைத் தாக்குதலில் அனைவரும் பலியாகினர். இது ஈரானின் பாதுகாப்பு அரணையே அடியோடு தகர்த்துள்ளது.
தனது உச்சக்கட்ட தலைவர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கில், ஈரான் தனது துருப்புச் சீட்டை பயன்படுத்தியுள்ளது. உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் உயிர்நாடியாக கருதப்படும் ‘ஹோர்முஸ் நீரிணையை’ (Strait of Hormuz) ஈரான் அதிகாரப்பூர்வமாக மூடியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குப் பொருளாதார ரீதியாகப் பெரும் நெருக்கடியை கொடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையை விண்ணை தொட செய்யும் என அஞ்சப்படுகிறது.
இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலை மிகவும் முக்கியமானது. ஏனெனில், இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 88 சதவீதத்தையும், இயற்கை எரிவாயுவில் 60 சதவீதத்தையும் வளைகுடா நாடுகளிலிருந்து இந்த ஹோர்முஸ் நீரிணை வழியாகவே இறக்குமதி செய்கிறது. இருப்பினும், தற்போதைக்கு இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய அரசு அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
இந்தியாவிடம் தற்போது 10 நாட்களுக்கு தேவையான சாதாரண இருப்பும், அவசர கால தேவைகளுக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள 5 முதல் 7 நாட்களுக்கான கூடுதல் இருப்பும் கைவசம் உள்ளது. ஒருவேளை இந்த தடை நீடித்தால், மாற்று வழியாக ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More : “விஜய்க்கு அனுபவம் இல்லை.. பல குறைகள் இருக்கு”..!! தவெக கூட்டத்தில் பரபரப்பை கிளப்பிய நாஞ்சில் சம்பத்..!!



