பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது.. ஈரானும் இரு நாடுகளுக்கும் பதிலடி கொடுத்து வருவதுடன் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்தும் தாக்குதல் நடத்தி வருகிறது.. இதனால் மேற்காசீயாவில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த போர் காரணமாக ஈரானில் மட்டும் சுமார் 1300 பேர் உயிரிழந்துள்ளனர்..
இஸ்ரேல் – ஈரான் போர் தொடங்கிய பின்னர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று முதல் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்தார்.. அணு ஆயுதங்களை உருவாக்குவதில் ஈடுபட்டிருந்த ஒரு மூத்த ஈரானிய விஞ்ஞானி இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அவர் கூறினார்.. மேலும் இஸ்ரேல் தாக்குதல், தெஹ்ரானின் இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்குக் குறிப்பிடத்தக்க இழப்புகளை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.
“நாங்கள் ஈரானில் உள்ள பயங்கரவாத ஆட்சியை நசுக்கி வருகிறோம். நாங்கள் அதன் முகவர் படைகள் மீதும் அதாவது லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா மீதும் தாக்குதல் நடத்தி அவர்களைத் தோற்கடித்து வருகிறோம்.
ஏறக்குறைய இரண்டு வாரங்களாக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதல்கள், ஈரானின் அதிகாரக் கட்டமைப்பை வெகுவாக பலவீனப்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல்கள் ‘புரட்சிகரப் பாதுகாப்புப் படை’ (Revolutionary Guards Corps) மற்றும் அந்த ஆட்சியின் அதிகாரத்தைச் செயல்படுத்த உதவும் ‘பசிஜ்’ (Basij) துணை இராணுவப் படை ஆகியவற்றை இலக்காகக் கொண்டிருந்தன.” என்று தெரிவித்தார்
ஈரானியத் தலைமை மீதான தாக்குதல்
ஈரானின் புதிய உச்சபட்சத் தலைவரான அயதுல்லா மொஜ்தபா கமேனியையும் நெதன்யாகு கடுமையாக விமர்சித்தார். சமீபத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, பொதுவெளியில் பாதுகாப்பாகத் தோன்ற முடியாத நிலையில் உள்ள அவரை, “புரட்சிகரப் பாதுகாப்புப் படையினரின் கையில் உள்ள ஒரு கைப்பாவை” என்று விமர்சித்தார்
ஈரானியத் தலைமையின் மூத்த பிரமுகர்களை இஸ்ரேல் தொடர்ந்து குறிவைக்கும் என்று நெதன்யாகு சூசகமாகத் தெரிவித்தார்; இருப்பினும், எதிர்காலத் திட்டங்கள் குறித்த விவரங்களை அளிக்க அவர் மறுத்துவிட்டார்.
மேலும் “அந்தப் பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் எவருக்கும் நான் ‘உயிர் காப்பீட்டுப் பத்திரம் எதையும் வழங்கப்போவதில்லை. நாங்கள் என்ன திட்டமிட்டு வருகிறோம் என்பது குறித்து, துல்லியமான செய்தியை இங்கே தெரிவிக்க நான் விரும்பவில்லை.” என்று தெரிவித்தார்..
பிரதமர் இவ்வாறு பேசிக்கொண்டிருந்த வேளையிலேயே, ஈரானிலிருந்து இஸ்ரேலியப் பகுதி நோக்கி ஏவப்பட்ட புதிய ஏவுகணைத் தாக்குதல் ஒன்றை தாங்கள் கண்டறிந்திருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது; இது, இரு தரப்புக்கும் இடையிலான மோதல் இன்னும் தீவிரமாகவே தொடர்கிறது என்பதை உணர்த்துகிறது.
ஈரானிய மக்களுக்கு ஒரு செய்தி
ஈரானியப் பொதுமக்களுக்கு நெதன்யாகு நேரடியாக ஒரு செய்தியை தெரிவித்தார்; இந்த இராணுவ நடவடிக்கையானது ஈரானுக்குள் அரசியல் மாற்றத்திற்கான சூழலை உருவாக்கக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.
இஸ்ரேலின் நடவடிக்கைகள், மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடுவதற்குத் தேவையான இடத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.. நீங்கள் சுதந்திரம் நோக்கிய ஒரு புதிய பாதையில் பயணிக்கக்கூடிய அந்தத் தருணம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அந்தத் தருணம் மிக அருகில் வந்துவிட்டது.
“நாங்கள் உங்கள் பக்கம் நிற்கிறோம். நாங்கள் உங்களுக்கு உதவி வருகிறோம்.. ஆனால் இறுதியில், அது உங்களைச் சார்ந்ததே ஆகும். அது உங்கள் கைகளிலேயே உள்ளது.” என்று தெரிவித்தார்
இந்த இராணுவ நடவடிக்கையின் போது அமெரிக்காவுடன் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள ஒருங்கிணைப்பையும் நெதன்யாகு சுட்டிக்காட்டினார். மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தான் தினமும் பேசி வருவதாக அவர் தெரிவித்தார். “இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஏற்பட்ட முன்னெப்போதும் இல்லாத அளவிலான கூட்டு முயற்சியின் மூலம், நாங்கள் மகத்தான சாதனைகளை எட்டியுள்ளோம்,” என்று நெதன்யாகு கூறினார்.
இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கக்கூடிய அணு ஆயுதங்களையும், பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் ஈரான் உருவாக்குவதைத் தடுப்பதே இச்செயல்திட்டத்தின் நோக்கம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். “நாங்கள் உடனடியாகச் செயல்பட்டிருக்காவிட்டால், சில மாதங்களுக்குள்ளாகவே, ஈரானின் அந்த ‘மரணத் தொழிற்சாலைகள்’ எந்தவொரு தாக்குதலுக்கும் உட்படாத வகையில் பாதுகாப்பைப் பெற்றிருக்கும்.” என்று கூறினார்.



