இந்திய ரயில்வேயில் வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரயில்வே வாரியம் (RRB) நாடு முழுவதும் காலியாக உள்ள சுமார் 22,000 குரூப் ‘டி’ (நிலை-1) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐடிஐ (NCVT/SCVT) முடித்திருக்க வேண்டும். தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி (NAC) சான்றிதழ் பெற்றவர்களுக்கும் முன்னுரிமை உண்டு. வயது வரம்பைப் பொறுத்தவரை, 2026 ஜனவரி 1-ஆம் தேதியின்படி 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், அரசு விதிகளின்படி எஸ்சி/எஸ்டி, ஓபிசி மற்றும் பிற சிறப்புப் பிரிவினருக்கு உரிய வயது வரம்புத் தளர்வுகள் வழங்கப்படுகின்றன.
தேர்வு முறையானது, முதலில் விண்ணப்பதாரர்களுக்குக் கணினி வழித் தேர்வு (CBT) நடத்தப்படும், அதில் தேர்ச்சி பெறுபவர்கள் உடற்தகுதித் தேர்விற்கு (Physical Test) அழைக்கப்படுவர். அதனைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் இறுதி மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு தகுதியானவர்கள் பணியமர்த்தப்படுவர். விண்ணப்பக் கட்டணமாக எஸ்சி/எஸ்டி, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு 250 ரூபாயும், இதர பிரிவினருக்கு 500 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை ஆன்லைன் வழியாகவே செலுத்தலாம். இப்பணிக்கு சம்பளமாக ரூ.18,000 முதல் வழங்கப்படும்.
ஆர்வமுள்ளவர்கள் https://www.rrbapply.gov.in அல்லது https://www.rrbchennai.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாக தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் 2026 பிப்ரவரி 20 இரவு 11:59 மணி வரை ஆகும். கடைசி நேர இணையதள நெரிசலைத் தவிர்க்க, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.



