திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ‘ஆண்டவன் உத்தரவு’ என்ற விநோதமான வழிபாடு மீண்டும் பக்தர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டவன் உத்தரவு கண்ணாடிப் பேழையில், சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு, கடல் நீர் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மலைக்கோயிலில், முருகப் பெருமான் பக்தர்களின் கனவில் வந்து குறிப்பிட்ட ஒரு பொருளை வைத்து வழிபட சொல்வது இக்கோயிலின் தனிச் சிறப்பாகும். பக்தர்கள் வந்து பூசாரியிடம் தெரிவித்ததும், அது ஆண்டவனின் உண்மை உத்தரவுதானா என தெரிந்துகொள்ள, பூ போட்டுப் பார்த்த பிறகே, ஏற்கனவே இருந்த பொருளை நீக்கிவிட்டு புதிய பொருளைக் கண்ணாடிப் பேழைக்குள் வைத்துப் பூஜிப்பது வழக்கம். இதுவே ‘ஆண்டவன் உத்தரவு’ என்று அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், கோவையைச் சேர்ந்த பக்தை பவானி என்பவரின் கனவில் முருகன் உத்தரவிட்டதாக, கண்ணாடிப் பேழைக்குள் கடல் நீர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, மார்ச் 6ஆம் தேதி முதல் பிரம்பு மற்றும் சூடம் வைத்துப் பூஜிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு காட்சிக்கு வைக்கப்படும் பொருள், அதைத் தொடர்ந்து நடக்கவிருக்கும் ஒரு பெரிய நிகழ்வை அல்லது விளைவை உணர்த்தும் என்பது பக்தர்களின் ஆழமான நம்பிக்கையாகும்.
தற்போது கடல் நீர் வைக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளன. கடலில் ஏதேனும் இயற்கை சீற்றம் (சுனாமி போன்றவை) ஏற்படுமா? வடகிழக்குப் பருவமழைக் காலம் என்பதால், ஆக்ரோஷமான புயல் ஏதேனும் உருவாகுமா? அல்லது கடல் சார்ந்த தொழில் வளர்ச்சி அடையுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
முன்கூட்டியே உணர்த்திய நிகழ்வுகள் :
சிவன்மலை ஆண்டவன் உத்தரவு, பல வரலாற்று நிகழ்வுகளை முன்கூட்டியே உணர்த்தியிருப்பதாக நம்பப்படுகிறது. கார்கில் போர், சுனாமி பேரழிவு, சசிகலா சிறை சென்ற விவகாரம் போன்ற முக்கிய நிகழ்வுகளை உத்தரவுப் பொருட்கள் மூலம் ஆண்டவர் உணர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், பருத்தி, இளநீர், மஞ்சள் போன்ற பொருட்கள் வைக்கப்பட்டபோது, அவற்றின் விலை படுபாதாளத்தில் இருந்த நிலை மாறி, திடீரென விலை உயர்ந்து விவசாயிகளுக்கு நன்மை அளித்த சம்பவங்களும் நடந்துள்ளன. குறிப்பாக, கொரோனா காலகட்டத்தில் மஞ்சளை வைத்துப் பூஜை செய்ய சொன்னபோது, மஞ்சள் ஒரு கிருமி நாசினியாகப் பெரிதும் பயன்பட்டு மக்களைக் காத்தது.
அதுபோன்றே, இந்த கடல் நீரும் ஏதோ ஒரு மாற்றத்தை உணர்த்தும் என்ற எதிர்பார்ப்பில், பக்தர்கள் கண்ணாடிப் பேழைக்குள் இருக்கும் பொருளை ஆவலுடன் தரிசித்துச் செல்கின்றனர். அடுத்த பூஜைப் பொருள் வேறொரு பக்தரின் கனவில் வரும்வரை, இந்தக் கடல் நீரே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.
Read More : சொந்த ஊர் மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட தனுஷ்..!! தலைக்கனம் ஓவரா இருக்கு..!! திடீரென வெடித்த சர்ச்சை..!!