திரைப்படத்திற்காக பெற்ற 6 கோடி ரூபாய் முன் பணத்தை திருப்பி தருமாறு நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிடக்கோரி, பாபி டச் கோல்டு யுனிவர்சல் பி.லிமிடெட் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. அந்த மனுவில், தங்களது நிறுவனத்தின் சார்பில் இரண்டு படங்களில் நடிப்பதற்காக நடிகர் ரவி மோகனுடன் கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், முதல் படத்திற்கு ஆறு கோடி ரூபாய் முன்பணமாக கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.
ஒப்பந்தப்படி தங்களது நிறுவனத்தின் படத்தில் நடிக்காமல் மற்ற நிறுவன படங்களில் நடித்த போது முன்பணத்தை திருப்பி கேட்டதாகவும் அப்போது ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்வதாகவும் முன்பணத்தை திருப்பி அளிப்பதாக ரவி மோகன் கூறியதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், பணத்தை திருப்பிக் கொடுக்காத நிலையில் தனது சொந்த படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதாகவும், அதன் மூலம் ப்ரோ கோட் என்ற படத்தை தயாரிக்க உள்ளதாக ரவி மோகன் வெளியிட்ட அறிவிப்பை கேட்டு தாங்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, ஒப்பந்தப்படி கால்ஷீட்டுடன் தயாரிப்பு நடத்தப்படாததால் தனக்கு ரூ.9 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறி, அதற்கும் நட்ட ஈடாக அதே நிறுவனத்துக்கு எதிராக ரவி மோகனும் மனுத் தாக்கல் செய்திருந்தார். இரு மனுக்களும் கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது..
அப்போது, ரவி மோகன் தாக்கல் செய்த ரூ.9 கோடி இழப்பீடு மற்றும் நிறுவனத்துக்கு தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும், ரூ.5.90 கோடி மதிப்புடைய சொத்து உத்தரவாதம் தாக்கல் செய்ய நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிடப்பட்டது.. ஆகஸ்ட் 20-ம் தேதிக்குள் ரூ.5.90 கோடிக்கு சொத்து உத்தரவாதம் அளிக்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது..
ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ரூ.5..90 கோடி சொத்து உத்தரவாதத்தை ரவி மோகன் தாக்கல் செய்யவில்லை.. காலக்கெடுவுக்குள் சொத்து உத்தரவாதம் தாக்கல் செய்யவில்லை என தயாரிப்பு நிறுவனம் தரப்பு கூறியது. மேலும் ரவி மோகன் சொத்துக்களை முடக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பு கூறியது.. இதுகுறித்து மனு தாக்கல் செய்ய பாபி டச் கோல்ட் யுனிவர்ஸ் பட நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.. இதன் மூலம் தயாரிப்பு நிறுவனம் விரைவில் ரவி மோகன் சொத்துக்களை முடக்கக் கோரி மனு தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
Read More : சட்டமன்ற தேர்தலில் நடிகர் சூர்யா போட்டி..? – ரசிகர் மன்றம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..