வேத ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒரு நபர் பிறக்கும் திதி அவரது குணாதிசயங்களையும் வாழ்வியல் முறையையும் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த வகையில், சூரியனும் சந்திரனும் இணையும் ‘அமாவாசை’ திதியில் பிறக்கும் நபர்கள், அதீத அறிவுத்திறன் மற்றும் ஆளுமைப் பண்பு கொண்டவர்களாக திகழ்கின்றனர். ஒன்பது கிரகங்களும் வலுப்பெறும் இந்தத் திதியில் பிறப்பவர்கள், வாய்ப்புகளுக்காக காத்திருக்காமல் தங்களுக்குத் தேவையான பாதையை தாங்களே உருவாக்கிக் கொள்ளும் உத்வேகம் கொண்டவர்களாக விளங்குவார்கள்.
அமாவாசை திதியில் பிறந்தவர்களின் மிகப்பெரிய பலவீனம் மற்றும் பலம் என பார்த்தால், அது அவர்களது மனநிலைதான். மனோகாரகனான சந்திரன் வலுவிழந்து காணப்படும் இந்தத் தினத்தில் பிறந்ததால், இவர்களிடம் எப்போதும் ஒரு தேடலும், எதிலும் திருப்தியடையாத மனப்போக்கும் இருந்து கொண்டே இருக்கும். எவ்வளவு பெரிய சாதனையை படைத்தாலும், இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாமோ? என்ற ஒருவிதமான மன உளைச்சலும் தேடலும் இவர்களை துரத்திக்கொண்டே இருக்கும். இதுவே அவர்களை ஒரு சிறந்த தலைவனாகவும், சளைக்காத உழைப்பாளியாகவும் மாற்றுகிறது.
மற்றொரு சுவாரசியமான அம்சம் என்னவென்றால், இவர்களது புத்திசாலித்தனம் மிகுந்த தந்திர குணம். இவர்கள் பேசும் சில வார்த்தைகளுக்கான உண்மையான அர்த்தம் புரிய மற்றவர்களுக்குச் சில ஆண்டுகள் கூட ஆகலாம். தங்களின் நுணுக்கமான செயல்பாடுகள் மூலம் பிறரின் மனதைக் கவர்வதில் இவர்கள் வல்லவர்கள். காதல் அல்லது திருமண வாழ்க்கையிலும், சுவையான உணவை உண்பதிலும் கூட இவர்களிடம் ஒருவிதமான நுணுக்கமான விமர்சனப் பார்வை இருந்து கொண்டே இருக்கும். பெற்றோரை நேசிப்பதிலும், எடுத்த காரியத்தில் உடும்புப் பிடியாக இருந்து வெற்றி காண்பதிலும் இவர்கள் தனித்து விளங்குவார்கள்.



