கடந்த 2020-ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய கொரோனா பெருந்தொற்றை யாராலும் மறக்க முடியாது. அந்த வடுக்கள் மறைவதற்குள், ‘பறவைக் காய்ச்சல்’ (H5N1) எனப்படும் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ், மனிதர்களிடையே அடுத்த உலகளாவிய சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக, இந்தியாவின் ‘முட்டை நகரம்’ என்று அழைக்கப்படும் நாமக்கல் மாவட்டத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வு, எதிர்காலப் பெருந்தொற்றைத் தடுப்பதற்கான முக்கியத் தரவுகளை வழங்கியுள்ளது.
1990-களின் இறுதியில் சீனாவில் தோன்றிய இந்த வைரஸ், இதுவரை 25 நாடுகளில் சுமார் 990 பேரை தாக்கியுள்ளது. இதில் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், பாதிக்கப்பட்டவர்களில் 475 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, இதன் இறப்பு விகிதம் (Fatality Rate) சுமார் 48 சதவீதமாகும். சமீபத்தில் அமெரிக்காவில் 180 மில்லியனுக்கும் அதிகமான பறவைகளும், 1,000-க்கும் மேற்பட்ட கறவை மாடுகளும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கூட, நாக்பூரில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில் 3 புலிகள் மற்றும் ஒரு சிறுத்தை இந்த வைரஸால் உயிரிழந்தது அதிகாரிகளை அதிச்சியில் ஆழ்த்தியது.
அசோகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பிலிப் செரியன் மற்றும் கௌதம் மேனன் ஆகியோர், ‘பாரத்சிம்’ (BharatSim) என்ற மென்பொருளைப் பயன்படுத்தி ஒரு புதிய ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்தது தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தை தான்.
நாமக்கல்லில் மட்டும் 1,600-க்கும் மேற்பட்ட பண்ணைகள் மற்றும் 7 கோடிக்கும் அதிகமான கோழிகள் உள்ளன. ஒருவேளை இங்கு ஒரு பண்ணைத் தொழிலாளிக்குத் தற்செயலாகப் பறவையிடமிருந்து வைரஸ் பரவினால், அது எப்படி ஒரு சமூகப் பரவலாக மாறும் என்பதை இவர்கள் கணினி மூலம் கணித்துள்ளனர்.
இந்த ஆய்வின் மிக முக்கியமான முடிவு என்னவென்றால், ஒரு தொற்று பரவத் தொடங்கும்போது நாம் நடவடிக்கை எடுப்பதற்கான ‘கால அவகாசம்’ மிக மிகக் குறைவு என்பதுதான். ஒரு கிராமத்தில் 2 முதல் 10 பேருக்குத் தொற்று உறுதியாகும்போதே நாம் தீவிரமான தனிமைப்படுத்துதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைப் பத்தைத் தாண்டிவிட்டால், அந்தத் தொற்று ஒட்டுமொத்த மக்கள் தொகையிடமும் பரவுவதைத் தடுப்பது சாத்தியமற்றது. அந்த நிலையில் ஊரடங்கு போன்ற மிகக் கடுமையான நடவடிக்கைகள் மட்டுமே பலன் தரும்.
பறவைகளை அழிப்பது (Culling) வைரஸ் மனிதர்களுக்குப் பரவுவதற்கு முன்பு செய்தால் மட்டுமே பலன் தரும் என இந்த ஆய்வு கூறுகிறது. ஒருமுறை மனிதர்களுக்குப் பரவத் தொடங்கிவிட்டால், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை உடனடியாகத் தனிமைப்படுத்துவது மட்டுமே தொற்றின் வேகத்தைக் குறைக்கும்.
இருப்பினும், இதில் ஒரு சவால் உள்ளது. மிக விரைவாகத் தனிமைப்படுத்தும்போது, அந்த வீட்டில் உள்ள மற்றவர்களுக்குத் தொற்று பரவும் அபாயம் அதிகரிக்கிறது. ஆனால், சமூகப் பரவலைத் தடுக்க இதுவே சிறந்த வழியாகக் கருதப்படுகிறது.
நிபுணர்களின் கூற்றுப்படி, பறவைக் காய்ச்சல் மனிதர்களிடையே பரவ தொடங்கினால், அது 2009-ஆம் ஆண்டு ஏற்பட்ட பன்றிக் காய்ச்சல் (Swine Flu) போன்ற ஒரு பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால், கொரோனா காலத்தைப் போல நாம் இப்போது நிராயுதபாணிகளாக இல்லை. நம்மிடம் ஏற்கனவே இதற்கான வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் (Antivirals) மற்றும் தடுப்பூசி மாதிரிகள் தயார் நிலையில் உள்ளன.
ஆனாலும், அலட்சியம் ஆபத்தானது. பறவைக் காய்ச்சல் வைரஸ், ஏற்கனவே மனிதர்களிடம் இருக்கும் சாதாரணக் காய்ச்சல் வைரஸுடன் இணைந்து உருமாற்றம் அடைந்தால், அது கணிக்க முடியாத புதிய பருவகாலத் தொற்றுகளை உருவாக்கும். நாமக்கல் போன்ற முட்டை உற்பத்தி மையங்களில் முறையான கண்காணிப்பும், ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளும் இருந்தால் மட்டுமே வருமுன் காக்க முடியும் என இந்த ஆய்வு எச்சரிக்கிறது.
Read More : 2026இல் கடக ராசிக்காரர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்..!! ஆனால் இந்த பிரச்சனையில் மட்டும் சிக்கிடாதீங்க..!!



