வெளியில் செல்லும்போதும், பயணம் மேற்கொள்ளும்போதும் பூனை குறுக்கே செல்வதைப் பார்த்தால், பலர் உடனடியாக நின்று விடுவார்கள் அல்லது தங்கள் பாதையை மாற்றிக் கொள்வார்கள். இப்படிச் செய்தால், ஏதோ விரும்பத்தகாத சம்பவம் நடக்கும் என்பது காலம் காலமாகப் பலரால் நம்பப்பட்டு வரும் ஒரு வழக்கம். இது எந்தவிதத்திலும் நிரூபிக்கப்படாத வெறும் மூடநம்பிக்கையாக இருந்தாலும், இது ஏன் உருவானது, இதற்குப் பின்னால் ஏதேனும் அறிவியல் அல்லது வரலாற்றுப் பின்னணி உள்ளதா என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல் உள்ளது.
இருட்டில் உருவான பாரம்பரியம் :
பூனை குறுக்கே செல்வது கெட்ட சகுனம் என்ற நம்பிக்கை இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளிலும் நிலவுகிறது. குறிப்பாக, பூனையின் நிறம் பற்றிய மூடநம்பிக்கைகள் கூட உள்ளன. பூனைகளைத் தீயதாகக் கருதுவதற்கு நிரூபிக்கப்பட்ட அறிவியல் காரணம் எதுவும் இல்லை என்றாலும், பழங்கால வாழ்வியல் முறையே இதற்குப் பின்னணியில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மின்சாரம் இல்லாத முந்தைய காலங்களில், மக்கள் இரவில் சாலையில் செல்லும்போது சத்தம் கேட்டால் உடனடியாக நின்று விடுவார்கள்.
இது ஏதேனும் காட்டு விலங்காக இருக்கலாம், அல்லது சாலையில் ஏதேனும் ஆபத்து இருக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாகச் செயல்பட்டனர். விலங்கு கடந்து சென்ற பிறகு, எந்தப் பிரச்சனையும் இல்லை என்று தெரிந்த பின்பே மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தனர். இந்தச் செயல்தான் நாளடைவில் கருப்புப் பூனையுடன் தொடர்புடைய பாரம்பரியமாக மாறியதாக ஒரு தகவல் உள்ளது.
வரலாற்றுப் பின்னணி :
இந்த மூடநம்பிக்கை வலுப்பெற ஒரு வரலாற்றுச் சம்பவம் காரணமாக அமைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, எலிகள் மூலம் பிளேக் (Plague) நோய் மிக வேகமாகப் பரவி, உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த நேரத்தில், எலிகளைப் பிடித்துச் சாப்பிடுவதுதான் பூனைகளின் முக்கிய உணவு. இதனால், எலிகளை உண்ட பூனைகள் மூலம் இந்தத் தொற்றுநோய் மனிதர்களுக்கும் பரவும் அபாயம் இருந்தது. இதன் காரணமாக, பலர் பூனைகளிடம் இருந்தும், பூனைகள் சென்று வந்த இடங்களிலிருந்தும் விலக ஆரம்பித்தனர்.
அதாவது, பூனைகள் சென்ற பாதையில் தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது என்று கருதி, மக்கள் அந்த இடத்தைத் தவிர்த்து, சிறிது நேரம் நின்ற பிறகு சென்றனர். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான், காலப்போக்கில் எந்தக் காரணமும் தெரியாமல், ‘பூனை குறுக்கே போனால் கெட்டது நடக்கும்’ என்ற மூடநம்பிக்கையாக மாறிப்போனதாகவும் கூறப்படுகிறது.
இந்தியா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் பூனைகளைப் பற்றி விதவிதமான கட்டுக்கதைகள் இன்றும் நிலவுகின்றன. எது எப்படியிருப்பினும், இது அறிவியலால் நிரூபிக்கப்படாத ஒரு நம்பிக்கை மட்டுமே.
Read More : குளிர்காலத்தில் இனி ஹீட்டர் தேவையில்லை!. அறையை சூடாக வைத்திருக்க இந்த 4 எளிய டிப்ஸை டிரை பண்ணுங்க!.



