இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் பலர் தங்கள் ஆரோக்கியத்தை பேணுவதற்காக சத்தான உணவுகளை நாடுகின்றனர். அதில் முக்கிய இடத்தை பிடிப்பது முளைகட்டிய பருப்பு வகைகள். புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்ததால் தினசரி உணவில் முளை கட்டிய பயிறுகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், அவற்றை பச்சையாக சாப்பிடலாமா? அல்லது சமைத்து சாப்பிடலாமா? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது.
பச்சையாக சாப்பிடுவதில் அபாயங்கள்: நிபுணர்களின் கூற்றுப்படி, முளைகளை பச்சையாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு பாதகமாக இருக்கும். ஏனெனில், அவற்றில் ஈ. கோலை, சால்மோனெல்லா போன்ற ஆபத்தான பாக்டீரியாக்கள் இருப்பதால், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வீக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், பச்சையாக சாப்பிடும்போது அவை எளிதில் ஜீரணமாகாது. நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதிக்கக்கூடும். இதனால், முளைகட்டிய பருப்புகளை சிறிதளவு சமைத்து சாப்பிட வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
சமைத்து சாப்பிடுவதின் நன்மைகள்: சமைத்த பிறகு பருப்பு வகைகளில் சில வைட்டமின்கள் குறைந்தாலும், அவற்றில் உள்ள சத்துகள் நம் உடலுக்குப் போதுமானவை. எடை குறைக்க விரும்புவோருக்கு முளைகட்டிய பருப்புகள் சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில் அவற்றில் கலோரி அளவு குறைவாகவும், புரதச்சத்து அதிகமாகவும் உள்ளது. வைட்டமின் சி, வைட்டமின் கே, மெக்னீசியம் உள்ளிட்ட பல தாதுக்கள் மற்றும் வைட்டமின்களும் இதில் அடங்கியுள்ளன. வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக சமைத்த முளைகட்டிய காய்கறிகளை வழங்குவது நல்லது என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
முளை கட்டிய பயிறு வகைகள் ஆரோக்கியமான உணவாக இருந்தாலும், அவற்றை நேரடியாக பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சிறிதளவு சமைத்து சாப்பிடுவது பாதுகாப்பானதும், சத்தானதுமாக இருக்கும். குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
Read more: 50% பேர் இந்த 6 காய்கறிகளை தவறாக சமைக்கிறார்கள்!. நீங்களும் அதே தவறைச் செய்கிறீர்களா?



