நமது அன்றாட உணவில் முட்டை முக்கியப் பங்கு வகித்தாலும், கொலஸ்ட்ரால் அளவு அதிகம் இருப்பவர்கள் முட்டை சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. இதுகுறித்து, பிரபல நரம்பியல் மருத்துவர் சுதிர் குமார் தனது எக்ஸ் தளத்தில் முக்கியமான விளக்கங்களைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, முட்டை சாப்பிடுவதில் யாரெல்லாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து அவர் வழங்கிய அறிவுரைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
ஒரு நாளைக்கு ஒரு முட்டை போதுமா..?
அதிக கொலஸ்ட்ரால் அளவு உள்ளவர்கள், ஒருநாளைக்கு ஒரு முட்டை சாப்பிடுவது பாதுகாப்பானது என்று மருத்துவர் சுதிர் குமார் கூறுகிறார். முட்டையை வேகவைத்த முட்டையாகவோ, அல்லது குறைவான எண்ணெய் சேர்க்கப்பட்ட ஆம்லெட்டாகவோ, அல்லது போச்ட் எனச் சொல்லப்படும் கொதிக்கும் நீரில் உடைத்து மெதுவாக ஊற்றி வேகவைத்தோ சாப்பிடுவது நல்லது.
முட்டையோடு சேர்த்து, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் கொலஸ்ட்ரால் உட்கிரகிக்கப்படுவது குறையும். உதாரணமாக, ஓட்ஸ், சாலட், மற்றும் காய்கறிகளை முட்டையோடு சேர்த்துக்கொள்ளலாம். அதேசமயம், வெண்ணெய், சீஸ் மற்றும் அதிகம் வறுக்கப்பட்ட உணவுகளை முட்டையோடு சேர்த்து சாப்பிடக் கூடாது. ஏனெனில், இந்த உணவுகள் LDL எனப்படும் கெட்ட கொழுப்பின் அளவை முட்டையைவிட வேகமாக அதிகரிக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
கொலஸ்ட்ரால் அளவு அதிகம் உள்ளவர்கள் மட்டுமன்றி, இன்னும் சில பிரிவைச் சேர்ந்தவர்களும் முட்டை உட்கொள்வதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர் சுதிர் குமார் வலியுறுத்தியுள்ளார்.
பரம்பரை அபாயம்: குடும்பத்தினர் யாருக்கேனும் Hypercholesterolemia எனப்படும் அதிக கொலஸ்ட்ரால் அளவு இருக்கும் வாய்ப்புள்ளவர்கள்.
அதிக LDL அளவு: LDL (கெட்ட கொழுப்பு) அளவு 190 mg / dL-க்கு அதிகமாக உள்ளவர்கள்.
இதயப் பாதிப்பு: ஏற்கனவே இதயப் பிரச்னைகள் உள்ளவர்கள்.
நீரிழிவு + அதிக LDL: நீரிழிவு பாதிப்புடன் சேர்த்து அதிக LDL அளவு உள்ளவர்கள்.
மேற்கண்ட இந்த 4 வகையின் கீழ் வருபவர்களும், வாரத்திற்கு 3 முட்டை என்ற அளவில் மட்டும் சாப்பிட்டு வரலாம் என்று மருத்துவர் சுதிர் குமார் அறிவுறுத்தியுள்ளார். மேலும், இவர்கள் ஊட்டச்சத்து நிபுணர் அல்லது தங்கள் மருத்துவரை அணுகி, அவர்களின் தனிப்பட்ட உடல்நிலைக்கு ஏற்ப ஆலோசனை பெறுவது மிக நல்லது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



