உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் பெரும்பாலும் ஜிம் செல்வதையே தீர்வாக கருதுகின்றனர். ஆனால், நம் சமையலறையில் தொடங்கும் சிறிய உணவு மாற்றங்களே பெரிய பலன்களைத் தரும் என்கிறார் உதிதா அகர்வால். இவர் ஜிம் செல்லாமலேயே 8 மாதங்களில் சுமார் 30 கிலோ எடையைக் குறைத்து அசத்தியுள்ளார். இவரது கூற்றுப்படி, பதப்படுத்தப்படாத முழு உணவுகளான காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளில் கவனம் செலுத்துவதே எடை இழப்புக்கு முக்கியம்.
ஆப்பிள்: நார்ச்சத்து நிறைந்தது. பசியைக் கட்டுப்படுத்தி ஆற்றல் அளிக்கும். 100 கிராமில் 52 கலோரி.
காலிஃபிளவர்: அரிசிக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். 100 கிராமில் 25 கலோரி மட்டுமே உள்ளது.
தர்பூசணி மற்றும் பப்பாளி: குறைந்த கலோரிகள், அதிக நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து கொண்ட இவை, நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தந்து, செரிமானத்திற்கும் உதவுகின்றன.
மோர் மற்றும் தேங்காய் நீர்: நீர்ச்சத்தை நிலைநிறுத்தி, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். மோரில் உள்ள புரோபயாடிக்குகள் செரிமானத்தை மேம்படுத்தும். தேங்காய் நீர் கொழுப்பை எரிக்க உதவும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு: வேகவைத்து அல்லது சுட்டுச் சாப்பிடலாம். பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. இரத்த சர்க்கரை அளவைச் சீராக வைக்கும்.
பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்: புரதம் மற்றும் நார்ச்சத்து நிரம்பியது. இவை நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்தும் ஆரோக்கியமான உணவுகள்.
டோஃபு: சோயா பாலில் இருந்து தயாரிக்கப்படும் இதில், கொழுப்பு குறைவாகவும், புரதம், கால்சியம் அதிகமாகவும் உள்ளது.
நட்ஸ் வகைகள்: பாதாம், முந்திரி, வால்நட் போன்ற நட்ஸ்கள் ஆரோக்கியமான நிறைவுறாக் கொழுப்புகள் மற்றும் ஆற்றலை வழங்குகின்றன.
டார்க் சாக்லேட்: சர்க்கரை குறைவாகவும், கோகோ அதிகமாகவும் உள்ள டார்க் சாக்லேட் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது; எடை குறைக்க முயற்சிப்பவர்களுக்கும் ஏற்றது.
வெண்ணெய் இல்லாத பாப்கார்ன்: குறைந்த கலோரி, அதிக நார்ச்சத்து கொண்டது. நெய் மற்றும் உப்பு சேர்த்து சுவையூட்டி சாப்பிடலாம்.
வறுத்த சன்னா (பொரிகடலை): அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து இருப்பதால், இது பசியைக் கட்டுப்படுத்தும் சிறந்த ஸ்நாக்ஸ். ஒரு நாளைக்கு 30-50 கிராம் சாப்பிடலாம்.
விரைவாக எடையை குறைப்பது ஆரோக்கியமானதல்ல என்றாலும், இந்த உணவுகளை உங்கள் அன்றாட உணவுப் பழக்கத்தில் சேர்த்துக்கொள்வது, ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கும் இலக்கை அடைய உதவும் என்று உதிதா அகர்வால் வலியுறுத்தியுள்ளார்.



