கர்நாடகாவில் உள்ள சில தனியார் கோழிப்பண்ணைகளில் இருந்து வரும் முட்டைகளில், புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருக்கலாம் என்று பரவி வரும் தகவல்கள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் மக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம் தேசிய அளவில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), அனைத்து மாநிலங்களிலும் முட்டை மாதிரிகளைச் சோதனை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். கர்நாடகாவில் எழுந்துள்ள இத்தகைய சுகாதாரப் பிரச்சனை தமிழ்நாட்டில் இல்லை என்றும், தமிழகத்தின் முக்கிய முட்டை உற்பத்தி மையமான நாமக்கல் பகுதிகளில் இருந்து வரும் முட்டைகள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன என்றும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வேதிப்பொருட்கள் பயன்பாடு ஏன்..?
முட்டையில் நைட்ரோ பியூரான் (Nitro furan) போன்ற வேதிப்பொருட்கள் கலக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்தக் கிருமிநாசினிகள், கோழிகளுக்கு நோய்த்தொற்று வராமல் தடுக்கவும், முட்டை உற்பத்தியை அதிகரிக்கவும் சில பண்ணைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வேதிப்பொருட்கள் மனித உடலில் நீண்ட காலத்துக்கு சேரும்போது, புற்றுநோய் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மருத்துவர்களின் விளக்கம் :
ஒரு சில முட்டைகளை சாப்பிடுவதால் உடனடியாகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படாது என்றும், இது குறித்த ஆய்வுகள் இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், முட்டைகளைச் சாப்பிடும்போது அவற்றை நன்கு சமைத்து அல்லது வேகவைத்துச் சாப்பிடுவது பாதுகாப்பானது எனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சமூக வலைதளங்களில் வரும் ஆதாரமற்ற தகவல்களை நம்பி மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், அதிகாரப்பூர்வமான ஆய்வக முடிவுகள் வெளியாகும் வரை காத்திருப்பது நல்லது என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Read More : இன்னும் இந்த வேலையை முடிக்கலையா..? உங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காது..!! தமிழ்நாடு அரசு அதிரடி..!!



