தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு நிலையான கட்டத்தை அடைந்திருக்கும் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் வீடு வாங்கும்போது, நிதி நிர்வாகத்தில் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். இந்த வயதில் வீட்டுக் கடன் வாங்குபவர்கள், மாதாந்திர தவணைகள் ஓய்வூதியச் சேமிப்பு மற்றும் நீண்ட கால நிதிப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையே சரியான சமநிலையைப் பேண வேண்டியது அவசியம். ஒருவேளை, EMI கட்டுவதற்காக ஓய்வூதிய சேமிப்பைப் பயன்படுத்தும் நிர்பந்தம் ஏற்பட்டாலோ அல்லது வழக்கமான செலவுகளுக்கு கிரெடிட் கார்டுகளைச் சார்ந்திருக்கும் நிலை வந்தாலோ, அந்த வீடு உங்களுக்கு நிதிச் சுமையாகவே மாறும்.
பொதுவாக, கடன் வழங்குநர்கள், கடன் வாங்குபவர்களின் ஓய்வுக்காலத்திற்குள் கடனை முடித்துவிட விரும்புவார்கள். எனவே, 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குக் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் குறைக்கப்படலாம். இதனால், 30 வயது நபரைவிட 40 வயதுள்ளவர் அதே தொகைக்கு அதிக EMI செலுத்த வேண்டியிருக்கும்.
இதை கையாள, பல தம்பதிகள் கூட்டுக் கடன் எடுக்கிறார்கள் அல்லது மாதாந்திர செலவு 30-35 சதவீதமாக இருக்கும் வகையில் பெரிய அளவில் முன்பணம் (Down Payment) செலுத்த சேமிக்கிறார்கள். இது EMI சுமையைக் கட்டுக்குள் வைக்க உதவும். மேலும், குறைந்தது ஆறு மாத அத்தியாவசியச் செலவுகளுக்கான அவசர நிதியைக் கையிருப்பாக வைத்திருப்பது திடீர் செலவுகளைச் சமாளிக்க உதவும்.
பெரிய வீட்டின் ஆசை, உங்கள் ஓய்வூதியத் திட்டங்களை ஒருபோதும் பாதிக்கக் கூடாது. உங்கள் புதிய EMI, EPF, VPF, NPS மற்றும் நீண்ட கால SIP போன்ற ஓய்வூதியச் சேமிப்புகளில் இடையூறு செய்தால், சிறிய சொத்தை வாங்குவது, அதிக முன்பணம் செலுத்துவது அல்லது கடனை நீண்ட காலத்திற்குக் கேட்டு வாங்குவது என உங்கள் பட்ஜெட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
வீடு வாங்கும்போது, நம்பகமான பொதுப் போக்குவரத்து, பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகில் உள்ள இடங்களைத் தேர்வு செய்வது புத்திசாலித்தனம். மேலும், கட்டி முடிக்கப்பட்டு உடனடியாகக் குடிபுகத் தயாராக உள்ள (Ready-to-Move) வீடுகளைத் தேர்வு செய்வது கட்டுமானத் தாமத அபாயங்களைத் தவிர்க்கும்.
வீட்டுக் கடன் என்பது உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கிறது. எனவே, நிலுவையில் உள்ள கடனுக்கு இணையாக ஒரு டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தையும், வலுவான ஒரு சுகாதாரக் காப்பீட்டையும் கட்டாயம் இணைக்க வேண்டும். இந்த இரண்டும், குடும்ப நெருக்கடி ஏற்படும்போது கடனைச் சுமக்காமல் உங்களைக் காப்பாற்றும்.
மேலும், வீட்டு உரிமை என்பது EMI-யுடன் முடிவதில்லை. பராமரிப்பு கட்டணம், பழுதுபார்ப்பு செலவுகள் மற்றும் புதுப்பித்தல் செலவுகளையும் (குறிப்பாகப் பழைய வீடுகளுக்கு) கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்காக ஒரு சிறிய தொகையை மாதந்தோறும் சேமிப்பது, திடீர் செலவுகளால் உங்கள் பட்ஜெட் பாதிக்கப்படுவதைத் தடுக்கும்.
சுருக்கமாக சொன்னால், 40 வயதில் வீடு வாங்கும் கனவை நனவாக்க, நீங்கள் சிறந்த இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். உங்கள் உண்மையான பணப்புழக்கத்திற்கு ஏற்ப EMI இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதேசமயம், ஓய்வூதியச் சேமிப்புகளைப் பாதுகாக்க வேண்டும், மேலும் சரியான காப்பீடுகள் மூலம் அபாயங்களைச் சமாளிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்தச் சமநிலை, உங்கள் வீடு வாங்கும் ஆசை, எதிர்காலப் பாதுகாப்பை சிதைக்காமல் இருப்பதை உறுதி செய்யும்.
Read More : உங்கள் வாஷிங் மெஷின் லைஃப் டைம் உழைக்கணுமா..? அப்படினா இந்த 4 விஷயத்தை எப்போதும் மறந்துறாதீங்க..!!



