தொழிற்துறையின் மையமாகத் திகழும் திருப்பூர், பனியன் மற்றும் துணி ஏற்றுமதியின் காரணமாக நாடு முழுவதும் அறியப்படும் நகரமாக வளர்ந்துள்ளது. சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடியமர்ந்துள்ள இந்த நகரத்தில், வெளிமாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்கள் இங்கு வேலைக்காக குடிபெயர்ந்து வருகின்றனர்.
இந்த சூழலில் தான், கலைஞர் மத்திய பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதச் செயல்கள் நடந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, சில பெண்கள் விபச்சாரம் மற்றும் அதனை சார்ந்த பணப்பறிப்பு செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
திருப்பூரில் புகழ்பெற்ற காமாட்சி அம்மன் கோவிலின் சுற்றுப்பகுதிகளில், குறிப்பாக வீதி மற்றும் சந்துகளில் ஆண்களை அழைத்து சென்று விபச்சாரம் செய்வதற்காக பெண்கள் முயற்சிப்பதாகவும், சிலர் பணப்பறிப்பு செய்வதாகவும் உள்ளூர் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக ஊடகங்களில் பரவியதால், சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில பெண்கள், மது அருந்திய நிலையில் பொது இடங்களில் ஆண்களுடன் உல்லாசமாக இருக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. இது போன்ற செயல்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து நடைபெறும் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, காவல்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.