தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி கணக்குகள் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக, தசாப்த காலத்திற்கும் மேலாக நீடித்து வரும் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தற்போது ஏற்பட்டுள்ள விரிசல், தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய அளவில் பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் அவசியம் என திமுக தலைமை கருதினாலும், தமிழகத்தில் அக்கட்சியின் வாக்கு வங்கி மற்றும் செல்வாக்கு குறித்து விசிக, மதிமுக போன்ற தோழமை கட்சிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றன. “பாஜகவை விடக் குறைவான வாக்கு வங்கியை கொண்டுள்ள காங்கிரசுக்கு, தொகுதிகள் ஒதுக்கீட்டில் அதிக முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை” என திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. மறுபுறம், திமுகவிடம் ‘ஆட்சியில் பங்கு’ மற்றும் ‘கூடுதல் தொகுதிகள்’ என காங்கிரஸ் மேலிடம் பிடிவாதம் காட்டி வருவது இழுபறியை நீட்டிக்க செய்துள்ளது.
இந்த சூழலை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கும் தமிழக வெற்றிக் கழகம், காங்கிரசுக்கு வெளிப்படையாகவே அழைப்பு விடுத்து வருகிறது. ஆட்சியில் பங்கு என்ற கவர்ச்சிகரமான வாக்குறுதியை முன்வைத்து விஜய்யின் தரப்பு வீசும் வலையில், காங்கிரஸின் ஒரு தரப்பு விழ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவது அரசியல் தற்கொலைக்கு சமம் என ப. சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் எச்சரித்து வருகின்றனர்.
ஒருவேளை, காங்கிரஸ் மேலிடம் தவெக-வுடன் கூட்டணி வைக்க முடிவெடுத்தால், அதனை ஏற்க மறுக்கும் ப. சிதம்பரம் தலைமையில் ‘காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை’ மீண்டும் உயிர் பெறும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட திமுக ஆதரவு நிலைப்பாடு கொண்ட தலைவர்கள் சிதம்பரம் பக்கம் கைகோர்க்க வாய்ப்புள்ளதால், தேர்தல் நேரத்தில் தமிழக காங்கிரஸ் இரண்டாக உடைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்த உட்கட்சிப் பூசல் மற்றும் கூட்டணி மாற்றங்கள் தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! பொங்கல் போனஸ் அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்..!



