சைவம் – அசைவம் என இரு வகை உணவு விரும்பிகளாலும் பனீர் அதிகம் விரும்பி உண்ணப்படுகிறது. அதன் காரணமாக, பனீரின் சந்தை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் தேவை அதிகரித்தவுடன், கலப்பட பனீர் சந்தையில் விற்பனை செய்யப்படத் தொடங்கியுள்ளது. கலப்படம் செய்யப்பட்ட பனீர் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். நீங்கள் வாங்கிய பனீர் நல்லதா இல்லையா என்பதை அறிய வீட்டிலேயே சில குறிப்புகளைப் பின்பற்றலாம்.
வாசனை மூலம்: உண்மையான பனீரை அதன் வாசனையிலேயே அடையாளம் காணலாம். புதிய பால் வாசனை தருவது தான் நல்ல பனீரின் முக்கிய அடையாளம். அதில் எவ்வித புளிப்பு அல்லது அசாதாரண வாசனையும் இருக்காது. ஆனால், கலப்படம் செய்யப்பட்ட பனீரில் புளிப்பு வாசனை அதிகமாக இருக்கக்கூடும். சில நேரங்களில் அது சோப்பு அல்லது செயற்கைப் பொருட்களைப் போன்ற துர்நாற்றத்தையும் தரக்கூடும். உங்களுக்கு அப்படியான வாசனை தெரிந்தால், நீங்கள் வாங்கிய பனீர் தரமற்றது, கலப்படம் செய்யப்பட்டதாக இருக்கலாம் என்பதைக் கவனிக்க வேண்டும்.
நீர் சோதனை: பனீரின் உண்மை தன்மையை அறிய நீர் சோதனை ஒரு எளிய வழியாகும். சிறிய பனீர் துண்டை எடுத்து தண்ணீரில் போட்டு, அந்த கிண்ணத்தை பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த பின் பனீர் மென்மையாக இருந்து, தண்ணீரின் நிறம் மாறாமல் இருந்தால் அது உண்மையான பனீராகும். ஆனால், கலப்பட பனீர் என்றால், அது கடினமாகி ரப்பர் போல உணரப்படலாம். மேலும், வேகவைத்த தண்ணீர் வெள்ளை அல்லது மஞ்சள் நிறமாக மாறக்கூடும்; சில நேரங்களில் அடிப்பகுதியில் தூள் பொருளும் தேங்கி இருக்கும். இது கலப்படம் செய்யப்பட்டதற்கான தெளிவான அறிகுறி.
அயோடின் சோதனை: அதேபோல அறிவியல் அடிப்படையிலான சோதனையும் செய்யலாம். ஒரு சிறிய பனீர் துண்டின் மீது சில துளிகள் அயோடின் அல்லது மஞ்சள் கரைசலைச் சேர்க்கவும். பனீர் உண்மையானதானால், அயோடின் மஞ்சள் நிறமாகவே இருக்கும். ஆனால், பனீர் கலப்படமாக இருந்தால், அது சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறமாக மாறும். சில நேரங்களில் அயோடின் தண்ணீருடன் கலந்து கருப்பு நிறமாக மாறுவதும் கலப்பட பனீரின் அடையாளமாகும்.
எலுமிச்சை சோதனை: பனீரின் உண்மைத்தன்மையை அறிய எலுமிச்சை சாறு ஒரு சிறந்த சோதனை முறையாகும். இதற்காக, முதலில் வெதுவெதுப்பான நீரில் ஒரு சிறிய பனீர் துண்டை போட்டு கலக்க வேண்டும். அதன் பிறகு அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும்.
உண்மையான பனீரானால், அது சிறிது உருகி பால் வாசனையை வெளியிடும். மேலும், நீர் சற்றே மேகமூட்டமாக மாறும். போலி அல்லது கலப்பட பனீரானால், அது துர்நாற்றத்தை வெளியிடும். நீர் எண்ணெய் கலந்தது போல தோன்றும். இந்த எளிய சோதனையின் மூலம், பனீர் நல்லதா அல்லது கலப்படமா என்பதை வீட்டிலேயே எளிதில் கண்டறியலாம்.