குளிர்காலத்தின் வருகை சருமத்தில் பல மாற்றங்களை கொண்டுவருகிறது. வறண்ட சருமம் மற்றும் முக வெடிப்புகள் ஒருபுறம் இருந்தாலும், பலரையும் வேதனைக்குள்ளாக்குவது குதிகால் வெடிப்புதான். இது நடக்கும்போது வலியை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பார்ப்பதற்கும் சங்கடத்தை உருவாக்கும். இதற்காக சந்தையில் கிடைக்கும் ரசாயனங்கள் கலந்த விலையுயர்ந்த கிரீம்களை தேடி ஓடுவதற்கு முன், உங்கள் சமையலறையில் நாம் சாதாரணமாக தூக்கி எறியும் ஒரு பொருளை கொண்டு இதற்கு தீர்வு காண முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
வேர்க்கடலை தோலின் மருத்துவ குணம் :
நாம் வேர்க்கடலையை சாப்பிட்டுவிட்டு தூக்கி எறியும் அந்த மெல்லிய தோல்களில் இயற்கையான எண்ணெய் சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடெண்டுகள் (Antioxidants) நிறைந்துள்ளன. இவை பாதங்களில் உள்ள இறந்த சரும செல்களை மென்மையாக நீக்கி, இழந்த ஈரப்பதத்தை மீண்டும் மீட்டெடுக்க உதவுகின்றன. வறட்சியால் சேதமடைந்த குதிகால்களை சீரமைப்பதில் வேர்க்கடலை தோல் வியக்கத்தக்க வகையில் செயல்படுகிறது.
இயற்கை மருந்தை செய்ய தேவையானவை :
காய்ந்த வேர்க்கடலை தோல் பொடி, தேங்காய் எண்ணெய், தேன் மற்றும் காய்ச்சாத பச்சைப் பால். முதலில் வேர்க்கடலைத் தோல்களை நன்றாகப் பொடித்துக் கொள்ளவும். அந்தப் பொடியுடன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் அரை ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் தேவையான அளவு பச்சைப் பால் சேர்த்து ஒரு கெட்டியான பேஸ்ட் பதத்திற்கு தயார் செய்து கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை :
முதலில் உங்கள் பாதங்களை வெதுவெதுப்பான நீரில் ஒரு 5 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். இதனால் சருமம் மென்மையாகும். பின்னர் தயார் செய்து வைத்துள்ள பேஸ்ட்டை வெடிப்புள்ள பகுதிகளில் தடவி, 5 முதல் 7 நிமிடங்கள் வரை மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, குளிர்ந்த நீரால் பாதங்களைக் கழுவ வேண்டும். ஈரப்பதம் குறையாமல் இருக்க ஒரு மாய்ஸ்சரைசர் தடவி, பருத்தி காலுறைகளை (Socks) அணிந்து கொள்ளலாம்.
இந்த முறையை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ந்து செய்து வந்தால், வறண்ட மற்றும் வெடிப்புகள் நிறைந்த உங்கள் பாதங்கள் மென்மையாகவும், பட்டுப் போன்ற அழகாகவும் மாறும். இயற்கை தந்த இந்த எளிய தீர்வைக் கடைப்பிடித்து குளிர்காலத்திலும் பாதங்களை ஆரோக்கியமாக பராமரிக்கலாம்.
Read More : “என்ன செய்தாலும் வேலைக்கு ஆகல”..!! அரசியலில் இருந்து ஒதுங்கும் ராமதாஸ்..? அதிர்ச்சியில் பாமகவினர்..!!



