தற்போதைய காலகட்டத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் நிலையில், இதை தவறான நோக்கத்தில் பயன்படுத்தும் மோசடிக் கும்பல்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மோசடிக்காரர்கள், தனிமையில் இருப்பவர்களை குறிவைத்து, டேட்டிங் செயலிகள் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் லட்சக்கணக்கில் பணத்தை பறித்து வருகின்றனர்.
அந்த வகையில், “கால் பாய் மோசடி” என அழைக்கப்படும் மோசடி முறையானது சென்னையில் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. தென் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், வேலைவாய்ப்பு தேடி சென்னைக்கு வந்துள்ளார். அம்பத்தூர் அருகே தங்கியிருந்து வேலை தேடி வந்துள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் பகுதி நேர வேலை வாய்ப்பு உள்ளதா..? என அவர் ஆராய்ந்த போது, இந்த மோசடி கும்பலிடம் அவர் சிக்கியுள்ளார்.
அந்த இளைஞர் வேலை தேடிக் கொண்டிருந்த சமயத்தில், டெலிகிராம் செயலியின் மூலம் ஒருவரிடம் இருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில், “கால் பாய் வேலை” இருக்கிறது என்றும், ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்தால், ரூ.5,000 வரை சம்பாதிக்கலாம் என்றும் கூறியுள்ளார். மேலும், இனி உங்களது வாழ்க்கையில் எந்தவிதமான கஷ்டங்களும் இருக்காது என்று ஆசைவார்த்தைகளை அள்ளிவிட்டுள்ளனர்.
இந்த வாய்ப்பை உண்மையாக நம்பிய அந்த இளைஞர், “ஒரே நாளில் இரண்டு பெண்களை சந்தித்தால் ரூ.10,000 வருமானம் கிடைக்கும்” என ஆசை கொண்டு, “சரி, நான் வருகிறேன்” என்று சம்மதித்துள்ளார். இதையடுத்து, அவரிடம் ரெஜிஸ்ட்ரேஷன் கட்டணம் என்ற பெயரில் ரூ.500 அனுப்பச் சொன்னார்கள். அவர் அந்த பணத்தை அனுப்பியதும், ஒரு லொகேஷன் பகிரப்பட்டு, இந்த இடத்துக்கு செல்லுங்கள். கஸ்டமரின் இருப்பிடம் பின்னர் தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்கள்.
அந்த இடத்துக்குச் சென்றதும், “இன்னும் ரூ.500 அனுப்பினால் தான் உண்மையான கஸ்டமர் லொகேஷனை கொடுக்க முடியும்” என மேலும் பணம் கேட்டுள்ளனர். அந்த இளைஞர், மோசடிக் கும்பலின் வார்த்தைகளை நம்பி, 500 ரூபாய் ஜிபே மூலம் அனுப்பியுள்ளார். அதன் பிறகு, “கஸ்டமர்” என ஒரு பெண்ணின் மொபைல் எண்ணை அவர்கள் வழங்கியுள்ளனர்.
அந்த எண்ணிற்கு அவர் அழைத்தபோது, பேசியவர் ஒரு சினுங்கல் குரலில் பேசினாராம். ஆனால், அது நடுநடுவே திடீரென துண்டிக்கப்பட்டு விட்டது. பின்னர், மீண்டும் அந்த மோசடி கும்பலை தொடர்பு கொண்டபோது, அந்த பெண்ணுக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லை. இருந்தபோதும் நாங்கள் பேசியிருக்கிறோம். ஆனால், அவர் முழுமையாக நம்ப வேண்டும் என்றால், நீங்கள் மேலும் ரூ.1,000 அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளனர்.
பின்னர், அவர்கள் கூறியபடி மீண்டும் ரூ.1,000 அனுப்பியுள்ளார். அதனைத் தொடர்ந்து, ஒரு இளம் பெண்ணின் புகைப்படம் அனுப்பி, “இவர்தான் உங்களுடன் இன்று இரவு தங்க உள்ளவர்” என மேலும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளனர். இப்படி பேசி பேசி மொத்தம் ரூ.11,500 வரை அந்த இளைஞரிடம் பெற்று விட்டனர்.
அதைத் தொடர்ந்து, அந்த கும்பல், அம்பத்தூர் பெட்ரோல் பங்க் அருகே அவரை வரவழைத்துள்ளனர். பின்னர், பெண் கஸ்டமரின் இருப்பிடம் பற்றி கேட்க அந்த இளைஞர் முயற்சிக்க, அந்த கும்பலின் மொபைல் போன் திடீரென ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, மோசடி கும்பலிடம் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த இளைஞர், உடனே, அவர் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த மோசடி கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.