இன்றைய தலைமுறையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதிகம் பயன்படுத்தும் ஆடை என்றால் அது டி-ஷர்ட் தான். இலகுவாக அணியக்கூடியது, வியர்வை உறிஞ்சக்கூடியது, உடலுக்கு வசதியானது என்பதால் டி-ஷர்ட் தற்போது ஆண்கள்–பெண்கள் என வித்தியாசமின்றி அனைவரின் தினசரி ஆடையாக மாறிவிட்டது. ஆனால், இந்த T-Shirt என்ற சொல்லில் உள்ள ‘T’ என்பதற்கு என்ன அர்த்தம்? ஏன் அதை T-சர்ட் என்று அழைத்தார்கள்? என்பது பலருக்கும் தெரியாத ஒரு சுவாரஸ்ய ரகசியம்.
டி-சர்ட்டின் முதல் விளக்கம்: ஃபேஷன் நிபுணர்களின் கூற்றுப்படி, டி-ஷர்ட் என்பது மிக எளிமையான கட்டமைப்பில் உருவாக்கப்படும் ஆடை. இதில் காலர் கிடையாது, ஸ்லீவ்கள் நேராக இருக்கும், சட்டையின் உடல்வாரியும் நேராகவே இருக்கும். இந்த ஆடையை முன் அல்லது பின் பக்கத்திலிருந்து நேராகப் பார்த்தாலே அது ‘T’ என்ற ஆங்கில எழுத்து போல தெரியும். மேலே நீளமாக தோள் பகுதி, கீழே உடல்வரி நேராக இருப்பதால், முழுமையான ‘T’ வடிவத்தை உருவாக்குகிறது. இதனால் தான் இந்த ஆடைக்கு T-Shirt எனப் பெயர் வந்தது என ஃபேஷன் வல்லுநர்கள் விளக்குகின்றனர்.
இரண்டாவது விளக்கம்: பிரிட்டிஷ் செய்தித்தாள் தி சன் (The Sun) வெளியிட்ட தகவலின்படி, முதல் உலகப்போரின் காலத்தில் அமெரிக்க படைவீரர்கள் பயிற்சிநேரங்களில் லேசான, வசதியான, வியர்வை உடனே உலரும் வகை சட்டைகளை அணிந்து வந்தனர். அந்த காலத்தில் அவற்றை Training Shirt என்று அழைத்துள்ளனர். காலப்போக்கில், டி-சர்ட் என்று சுருக்கப்பட்டு, உலகமெங்கும் பரவலாகப் பயன்படும் பெயராக மாறிவிட்டது.
நம் அன்றாட வாழ்வில் தினமும் பயன்படுத்தும் இந்த டி-ஷர்ட் பெயருக்குப் பின்னால் ஒன்று வடிவியல் விளக்கம், மற்றொன்று போர்கால வரலாறு என்று இரண்டு சுவாரஸ்யமான கதைகள் இருப்பது ஆச்சயமளிகிறது. ஓராயிரம் வகை ஃபேஷன்கள் வந்தாலும், உலகம் முழுவதும் பிரபலமான ஆடை என்று எப்போதும் T-Shirt-க்கே தனி அடையாளம் இருக்கும் என்பதும் உண்மை.



