இந்தியாவின் போக்குவரத்து முதுகெலும்பாக திகழும் ரயில்வே துறையில், சுமார் 7,300-க்கும் மேற்பட்ட நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு நிலையமும் ஒரு தனித்துவமான பெயரோடு அடையாளப்படுத்தப்படும் நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் ஒரு ரயில் நிலையம் கடந்த 18 ஆண்டுகளாக எந்தவிதப் பெயரும் இல்லாமல் இயங்கி வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கிராமங்களுக்கு இடையே மூண்ட பெயர் யுத்தம் :
மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் நகரிலிருந்து சுமார் 35 கி.மீ தொலைவில், பான்குரா – மசாகிராம் ரயில் பாதையில் இந்த வினோத நிலையம் அமைந்துள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு இந்த நிலையம் கட்டி முடிக்கப்பட்டபோது, அதன் பெயர் தொடர்பாக ரெய்னாகர் (Rainagar) மற்றும் ராய்நகர் (Raina) ஆகிய இரு கிராமங்களுக்கு இடையே கடும் மோதல் வெடித்தது. தங்கள் ஊரின் பெயர்தான் நிலையத்திற்கு வைக்கப்பட வேண்டும் என இரு தரப்பினரும் பிடிவாதம் பிடித்தனர். தொடக்கத்தில் ‘ரெய்னாகர்’ என பெயர் பலகை வைக்கப்பட்டாலும், ராய்நகர் மக்களின் கடும் எதிர்ப்பால் அது உடனடியாக நீக்கப்பட்டது.
இந்த விவகாரம் ஒருகட்டத்தில் நீதிமன்ற படியாக ஏறியது. இரு கிராம மக்களின் உணர்வுகளையும், சட்டச் சிக்கல்களையும் கருத்தில் கொண்ட ரயில்வே நிர்வாகம், தீர்ப்பு வரும் வரை நிலையத்தின் பெயர்ப் பலகையை அப்படியே காலியாக விட்டுவிட்டது. இதன் விளைவாக, இன்றுவரை அந்த நிலையத்தின் மஞ்சள் நிறப் பலகைகள் எந்த எழுத்துக்களும் இன்றி மொட்டையாகவே காட்சியளிக்கின்றன. பயணிகள் இந்த நிலையத்தை அடையாளம் காண முடியாமல் குழப்பமடைவது இங்கு தொடர்கதையாக உள்ளது.
பெயர்ப்பலகை காலியாக இருந்தாலும், இந்த நிலையம் செயல்பாட்டில் மிகவும் பிஸியாகவே உள்ளது. தினமும் சுமார் 6 ரயில்கள் இங்கு வந்து செல்கின்றன. ஆயிரக்கணக்கான பயணிகள் டிக்கெட் எடுத்துப் பயணம் செய்கின்றனர். நிலையத்திற்குப் பெயரே இல்லாதபோது எப்படி டிக்கெட் வாங்குகிறார்கள் என்ற கேள்வி எழலாம். பெயர்ப்பலகைதான் காலியாக இருக்கிறதே தவிர, ரயில்வே ஆவணங்களிலும், பயணச் சீட்டுகளிலும் இப்போதும் பழைய பெயரான ‘ராய்நகர்’ என்ற பெயரிலேயே டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.
நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு எப்போது வரும், இந்த வினோத நிலையத்திற்கு அதிகாரப்பூர்வமாகப் பெயர் எப்போது சூட்டப்படும் என அந்தப் பகுதி மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.



