தமிழ்நாட்டின் ஆன்மீக தலங்களில் ஒன்றாக திருப்பத்தூர் மாவட்டம், நாற்றம்பள்ளி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா ருத்ராட்ச லிங்க கோவில் மாறியுள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து நாற்றம்பள்ளி செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்தக் கோவில், தமிழ்நாட்டிலேயே வேறு எங்கும் இல்லாத ஒரு பிரம்மாண்டமான சிறப்பை கொண்டுள்ளது.
இந்த ஆலயத்தில், ஒன்றரை லட்சத்திற்கும் (1,50,000) மேற்பட்ட ஐந்து முக ருத்ராட்சங்களால் வடிவமைக்கப்பட்ட 9 அடி உயரமுள்ள சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது ஆன்மீக அன்பர்கள் மத்தியில் பெரும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கோவிலின் வளாகத்தில், பக்தர்களை ஆச்சரியப்படுத்தக்கூடிய ஒரு இயற்கையான அதிசயம் உள்ளது.
அங்கு, இரண்டு வேப்ப மரங்கள், ஒரு அரச மரம், ஒரு பனை மரம் மற்றும் ஒரு வெப்பால மரம் என 5 விதமான மரங்கள் (பஞ்ச விருட்சங்கள்) ஒன்றிணைந்து ஒரே இடத்தில் வளர்ந்துள்ளன. இந்த அதிசய மரங்களின் அடியில்தான் முதன்முதலில் ஒரு சிறிய சிவலிங்கத்தை வைத்துப் பக்தர்கள் வழிபட்டு வந்தனர். அதன் பின்னரே, அந்த இடத்தில் 9 அடி உயர ருத்ராட்ச லிங்கம் ஒன்றரை லட்சம் ருத்ராட்சங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கோவிலில் சுமார் ஏ7 லட்சம் ஐந்து முக ருத்ராட்சங்களால் ஆன, 27 அடி உயரமுள்ள மிக பிரம்மாண்டமான மற்றொரு சிவலிங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஒரு தனித்துவமான வாய்ப்பு அளிக்கப்படுகிறது. வரும் பக்தர்கள் ஒவ்வொருவரின் கையிலும் ஐந்து ருத்ராட்சங்கள் கொடுக்கப்பட்டு, அதைச் சிவலிங்கத்தின் மீது வைத்து வழிபடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதற்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. தரிசனம் முடிந்து வெளியேறும் பக்தர்களுக்கு, மங்களகரமான நினைவுப் பரிசாக ஒரு 5 முக ருத்ராட்சம் இலவசமாக வழங்கப்படுவதும் இந்தக் கோவிலின் தனிச்சிறப்பாகும். இந்த ஸ்ரீ மஹா ருத்ராட்ச லிங்கக் கோவிலில் சிவலிங்கத்தைத் தரிசிக்கப் பக்தர்கள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆன்மீகமும், இயற்கையின் அதிசயமும் ஒருங்கே அமைந்த இந்த ஆலயம், பக்தர்களை தன்னகத்தே ஈர்த்து வருகிறது.
Read More : தமிழகமே..! இந்த 8 மாவட்டத்தில் இன்று வெளுத்து வாங்கும் கனமழை…! வானிலை மையம் எச்சரிக்கை…!



