ஆன்மீக மரபுகளில் எலுமிச்சை பழம் முக்கியத்துவம் வாய்ந்தது. திருமண விழாக்களில் இருந்து தினசரி பூஜைகள் வரை என அனைத்திற்கும் எலுமிச்சை பயன்படுகிறது. இது வெறும் உணவுப் பழமல்ல, ஆன்மீக ஒளிக்குறியாகவும், ஆற்றல் வளத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.
பழம்பெரும் புராணக் கதைகளில் எலுமிச்சையின் தோற்றம் தொடர்பான ஒரு சுவாரசியமான குறிப்பு இடம்பெறுகிறது. நிம்பாசுரன் எனும் அசுரன், மக்களைக் கஷ்டப்படுத்தும் வகையில் பஞ்சத்தை ஏற்படுத்தினான். அவனது கொடூரம் அதிகரித்தபோது, சாகம்பரி தேவி அவதரித்து அவனை அழித்தார். இறக்கும் முன் நிம்பாசுரன் ஒரு வரம் கேட்டான். மக்கள் தன்னை என்றும் நினைவு கூர வேண்டும் என்று. அதன் பரிசாகவே தேவி, அவனை “நிம்பு பலா” எனும் ஒரு பழத்தின் வடிவமாக பூஜிக்கப்படும் வகையில் ஆமோதித்தாள். இதுவே நம்முடைய இன்றைய எலுமிச்சை பழம்.
இத்தகைய அடித்தளத்துடன், எலுமிச்சை இன்றும் கோவில்கள், வீடுகள், சடங்களில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக சண்டி, காளி போன்ற வீர தேவிகளை சமரசப்படுத்தும் செயல்களில் எலுமிச்சைக்கு முக்கிய பங்கு உண்டு. சில நேரங்களில், 108 எலுமிச்சைகளால் தயாரிக்கப்பட்ட மாலை, தெய்வத்துக்கு அர்ப்பணிக்கப்படும். இது, கோபம் நிறைந்த தெய்வ சக்திகளை மென்மையாக்கும் ஒரு வழியாக கருதப்படுகிறது.
எலுமிச்சையின் மற்றொரு முக்கிய அம்சம் தீய சக்திகளை தணிக்கும் தன்மை கொண்டதாகும். வீட்டு வாசலில் எலுமிச்சையை வைப்பது, புதிய வாகனத்திற்கு எலுமிச்சையை வைத்து அதன் மீது வண்டியை இயக்குவது, எலுமிச்சை–மிளகாய் கட்டி தொங்க விடுவது இவை அனைத்தும் மோசமான சக்திகளிலிருந்து பாதுகாத்து, நன்மைகளை தரும் என மக்கள் நம்புகின்றனர்.
பல்வேறு கோவில்களில் சக்தி தேவிகளுக்கு எலுமிச்சை மாலைகள் காணிக்கையாக செலுத்தப்படுகிறது. அந்த மாலைகளை பூஜைக்குப் பின் வீட்டிற்கு கொண்டு வருவது, அந்த இடத்தில் அமைதி நிலவுவதாகவும், கெட்ட சக்திகள் நெருங்காது எனவும் நம்பப்படுகிறது. இது போல, பெரும்பாலான பரிகார வழிபாடுகளிலும் எலுமிச்சைக்கு முன்னிலை வழங்கப்படுவது, அதன் ஆற்றல் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. ஒரு எலுமிச்சையை வைத்து சுபம் பார்க்கும் கலாசாரம், இன்று வரை நம் சமூகத்தில் வேரூன்றியிருக்கிறது.
Read More : விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்கு இந்த பொருட்கள் அவசியம்!. இப்போதே பட்டியலை தயார் பண்ணுங்க!